விஜயை பின்தொடர்ந்து பைக்கில் சென்றபோது விபத்து
விஜயின் பரப்புரை பயணத்தில் விபத்துகள் தொடர் கதையாகி வருகின்றன.

தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணத்தை தமிழகம் முழுவதுமே செய்து வருகிறார். அந்த வகையில் இன்று நெல்லை வந்துள்ளார். அதற்காக சில தினங்களுக்கு முன்பாகவே நெல்லை கேடிசி நகர் பகுதியில் பிரமாண்ட மேடைகள் அமைத்து சுமார் 5000க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் வகையிலான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மதியம் 1 மணிக்கு கேடிசி நகர் பகுதியில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்று பேசி விட்டு அதன் பிறகு வாகனத்தில் ஏறி தாழையூத்து சென்று அங்கிருந்து தச்சநல்லூர் மற்றும் வண்ணாரப்பேட்டை வழியாக மீண்டும் திருச்செந்தூர் ரோட்டிற்கு வந்து தூத்துக்குடி செல்ல இருக்கிறார். பொதுமக்களுக்கு ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக சுமார் 3,000 மேற்பட்ட காவல் துறையினர் நெல்லை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜயை பார்ப்பதற்காக ஏராளமான தொண்டர்கள் ரசிகர்கள் என்று கேடிசி நகர் சுற்றுவட்டார பகுதிகளில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விஜயின் பரப்புரை பயணங்களில் பின் தொடர் விபத்து வழக்கமாகிவிட்டன. இன்று தூத்துக்குடியில் விஜயின் வேனை வேகமாக பின் தொடர்ந்து சென்ற பைக் கீழே விழ, தொடர்ந்து பல பைக்குகள் மோதி விழுந்தன. எனினும் விஜய் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுவிட்டார். ஒன்றோடொன்று மோதி கீழே விழுந்த தவெக தொண்டர்களின் இரு சக்கர வாகனங்களை போலீஸ் பறிமுதல் செய்தது. இதில் ஐந்து பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீர் விசாரணை நடத்தி வருகிறார்.



