செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் காரில் கடத்தல்

 
கடத்தல்

செங்கல்பட்டில் பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த ஆட்டோ ஓட்டுநர் வேலன் என்பவரின் 11 வயது மகள் மற்றும் 7 வயது மகன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலன் (31). இவருக்கு திருமணமாகி ஆர்த்தி (30).  என்கிற மனைவியும், ரக்சிதா (11), நித்தின் (7) என்கிற மகனும் உள்ளனர். வேலன் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வரும் நிலையில், ஆர்த்தி செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். 

வேலனின் அரவணைப்பில் குழந்தைகள் இருவரும் இருந்த நிலையில், ஒழலூர் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் சிறார்கள் இருவரும் இன்று வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற நிலையில், மதிய உணவு இடைவேளையின் போது, காரில் வந்த ஒரு ஆண் ஒரு பெண் என இருவர் பள்ளியின் தலைமை ஆசிரியர் எழிலரசியிடம் சென்று தான் வேலனின் தங்கை என்றும், நீண்ட நாட்களுக்கு பிறகு ஊருக்கு வந்துள்ளதால் குழந்தைகளை காண வேண்டும் என தெரிவித்துள்ளார். 

அதன் அடிப்படையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் குழந்தைகளை பார்ப்பதற்கு அனுமதித்துள்ளார். தொடர்ந்து சிறிது நேரத்தில் அங்கிருந்து ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் சேர்ந்து வேலனின் குழந்தைகளான ரக்சிதா, நித்தின் ஆகிய இருவர் காரில் கடத்தி சென்றுள்ளனர். இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார். 

இதையடுத்து, பள்ளிக்கு வந்த காவல்துறையினர் ஆகியோர் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளிக்கு வந்த வேலனின் உறவினர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, வேலனின் மனைவி ஆர்த்தி தனது குழந்தைகளை அழைத்துச் சென்றாரா? அல்லது வேறு யாராவது கடத்திச் சென்றார்களா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.