ஆவினின் செம திட்டம் : பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு மாற்றாக தானியங்கி இயந்திரங்கள் மூலம் பால் விற்பனை..!
பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு மாற்றாக தானியங்கி இயந்திரங்கள் மூலம் பால் விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட புகழ்பெற்ற மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு அமர்வு, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் விநியோகம் செய்வதற்கு பதிலாக மாற்று வழிகளைக் கண்டறியுமாறு ஆவின் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தாக்கல் செய்த அறிக்கையில், பால் விநியோகத்திற்கு தானியங்கி பால் விற்பனை இயந்திர முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
முதல் கட்டமாக, உதகை, கொடைக்கானல் நகரங்களின் முக்கியப் பகுதிகளில் இந்த இயந்திரங்கள் சோதனை அடிப்படையில் அமைக்கப்படும் என்றும் இதற்காக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து, தலா 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இரண்டு இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளதாகவும் விவரித்துள்ளது.இந்தத் தானியங்கி பால் இயந்திரங்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்யப்படும் என்றும், அதன் முடிவுகளைப் பொறுத்து மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் ஆவின் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

