பால் கொள்முதல், கமிஷன் தொகையை உயர்த்துக- பால் முகவர்கள் சங்கம்

பால் முகவர்கள் சங்கத்தின் மின்னஞ்சல் கடிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வருக்கு பால் முகவர்கள் சங்க தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில அரசுகளின் கூட்டுறவு பால் நிறுவனங்களுக்கெல்லாம் முன்னோடி தாய் நிறுவனமாக திகழும் குஜராத் மாநிலத்தின் அமுல் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினுக்கு போட்டியாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் பால் கொள்முதல் செய்வதற்கான கூட்டுறவு கட்டமைப்புகளை உருவாக்கி வருவது தொடர்பாகவும், அமுலின் வரவு ஆவினுக்கு அழிவை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டி உடனடியாக முதல்வர் அவர்கள் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும், இல்லையெனில் ஆவினின் வீழ்ச்சியையும், அமுலின் வளர்ச்சியையும் தமிழகத்தில் தடுத்து நிறுத்த முடியாது என்பதற்கான தரவுகளுடன் கடந்த 22.05.2023அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களுக்கும் மின்னஞ்சல் வாயிலாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் தொழில் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மின்னஞ்சல் கடிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தும், தமிழகத்தில் ஆவினில் நிலவும் தற்போதைய பால் கொள்முதல் நிலவரத்தை கவனத்தில் கொண்டும், அமுலின் வரவால் ஏற்படும் பாதிப்புகள், பிரச்சினைகளின் தீவிரம் அறிந்தும் அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினை சார்ந்துள்ள பால் உற்பத்தியாளர்களின் நலனை காத்திட அமுல் நிறுவனத்தின் செயல்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கடிதம் எழுதியிருப்பதற்கு முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
அத்துடன் பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்களின் உழைப்பால் செயல்பட்டு வரும் ஆவினின் வளர்ச்சிக்காக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ராமருக்கு உதவிய அணிலைப் போல தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் ஆவின் நிர்வாகத்தில் தற்போதுள்ள நிர்வாக சீர்கேடுகளை களைந்து, தேவையற்ற செலவினங்களை குறைத்து, பால் கொள்முதல் மற்றும் விற்பனையை அதிகரிக்க இன்னும் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பால் கொள்முதலை அதிகரிக்க பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலித்து கொள்முதல் விலையை தாமதமின்றி லிட்டருக்கு 10.00ரூபாய் உயர்த்தி வழங்குவதோடு, 10ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தி வழங்கப்படாமல் இருக்கும் ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை லிட்டருக்கு 5.00ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் எனவும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதிக்கப்படாவண்ணம் தனியார் பால் நிறுவனங்களின் விற்பனை விலையை விட லிட்டருக்கு 6.00ரூபாய் குறைவாக இருக்கும் வகையில் ஆவின் பால் விற்பனை விலையை ஒரே சீரான அளவில் உயர்த்தும்பட்சத்தில் இதனை எளிதாக நடைமுறைப்படுத்த முடியும் என்பதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் ஆலோசனையாக தெரிவித்து கொள்வதோடு, கடந்த காலங்களில் இது தொடர்பாக அரசுக்கு அளித்த அதே ஆதரவை தற்போதும் அளிக்க தயாராக இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.