ஆடி அமாவாசை - முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!!

ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு உகந்த மாதம் என்று சொல்வதுண்டு. அந்த அளவுக்கு ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களும் விசேஷமான ஒன்றாக காட்சியளிக்கும். அதேபோல் ஆடி மாதத்தில்தான் அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில் இன்று ஆடி அமாவாசை வழிபடப்படுகிறது. அமாவாசை என்றாலே அது முன்னோர்களுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி அமாவாசை என்பது அமாவாசை தினங்களில் மிகவும் முக்கியமான ஒன்று.
இந்த நாளில் மறைந்த நம் முன்னோர்களை வழிபாடு செய்து அவர்களுக்கு தர்ப்பணம் வழங்கும் போது அவர்களின் உள்ளம் குளிர்ந்து குடும்பம் தழைக்கும் என்பது ஐதீகம். அதேபோல் பல அமாவாசைகளில் முன்னோர் வழிபாட்டை செய்ய முடியாமல் தவற விட்டவர்கள் ஆடி அமாவாசை அன்று தர்பணம் கொடுத்து முன்னோரை வழிபட்டால் அந்த குறைகள் அனைத்தும் நீங்கிவிடும் .
இந்நிலையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியிலும் மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் மக்கள் ஆடி அமாவாசை நாளான இன்று அரிசி, தர்ப்பை, எள், உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு தர்ப்பணம் கொடுத்து வணங்கி வருகின்றனர்.