சவுக்கு சங்கர் வீட்டில் மனித கழிவுகளை ஊற்றி இருப்பது சட்ட, ஒழுங்கை கேள்விக்குள்ளாகியுள்ளது- ஆதவ் அர்ஜூனா

 
ஆதவ் அர்ஜூனா

திரு. சவுக்கு சங்கர் அவர்களின் வீட்டில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என தவெகவின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார்.

Image


சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வருபவர் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர். யூடியூபில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், இவருக்கு எதிராக சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஜாமின் பெற்று வெளியே வந்த இவர், தொடர்ந்து யூடியூபில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ பதிவிட்டுவருகிறார். தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி இவர் வீட்டின் மீது இன்று (மார்ச் 24) காலை தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார்.


 

இச்சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் தவெகவின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில், “ஊடகவியலாளர் திரு. சவுக்கு சங்கர் அவர்களின் வீட்டில் நடைபெற்ற அராஜக செயல் கண்டிக்கத்தக்கது. அவரது விமர்சனம் சட்டத்திற்குப் புறம்பானதாக இருந்திருந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, சட்டத்திற்கு அப்பாற்பட்டு தனிமையிலிருந்த அவரது தாயாரை அநாகரிகமான வார்த்தைகளால் அச்சுறுத்தியிருப்பதும், அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வீடு முழுக்க மனித கழிவுகளை ஊற்றி இருப்பதும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கை கேள்விக்குள்ளாகியுள்ளது.  ஓர் முதிர்ந்த தாய்க்கு ஏற்பட்ட இந்த அவலம், பெண்களை அச்சுறுத்திப் பார்க்கலாம் என்ற ஆணவத்தின் வெளிப்பாடே அன்றி வேறில்லை. திரு. சவுக்கு சங்கர் அவர்களின் வீட்டில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். தனிமனித சுதந்திரத்திற்குக் குரல் கொடுப்போம்! வாய்மையே வெல்லும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.