“ஜனநாயகத்தின் குரல் மீண்டும் ஓங்கி ஒலித்துள்ளது”- மீண்டும் அதவ் அர்ஜூனா ட்வீட்
ஜனநாயகத்தின் குரல் மீண்டும் ஓங்கி ஒலித்துள்ளது என அதவ் அர்ஜூனா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

த.வெ.க. தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் எக்ஸ் தள பதிவு, வன்முறையையோ, வெறுப்பையோ தூண்டும் வகையில் இல்லை எனக் கூறி, அவர் மீதான வழக்கை ரத்து செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். கரூர் சம்பவத்தை அடுத்து, த.வெ.க.வினர் கைது நடவடிக்கைகளை கண்டித்து எக்ஸ் தளத்தில், இலங்கை, நேபாளத்தைப் போல் புரட்சி ஏற்படும் என பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது, வன்முறையை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் மீண்டும் கருத்து தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜூனா, “ஜனநாயகத்தின் குரல் மீண்டும் ஓங்கி ஒலித்துள்ளது. ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான கருத்துரிமைக்கு தொடர்ந்து நெருக்கடியை கொடுத்துவரும் ஆட்சியாளர்களின் ஆதிக்க உணர்வுக்கும், அடக்குமுறைக்கும் எதிரான ஒரு தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.ஜனநாயக உரிமைகள் பறிபோகிற நேரங்களில் எல்லாம், அவற்றை மீட்டுக் கொடுத்து, ஜனநாயகத்தைக் காக்கும் மன்றங்களாக உள்ள நீதிமன்றங்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். ஆதிக்கம் எங்கெல்லாம் தலைதூக்குகிறதோ, அங்கெல்லாம் நம்முடைய எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும்! வாய்மையே வெல்லும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.


