தவெகவினர் எந்த டெண்டரும் எடுக்கக்கூடாது- ஆதவ் அர்ஜூனா
எந்த விதமான டெண்டர்களிலும் கமிஷன், ரெக்கமண்டேஷன் இருக்கக்கூடாது என முதலமைச்சர் விஜய் கூறி இருக்கிறார் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

வில்லிவாக்கத்தில் அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுவாக மக்களுக்கு நன்றி சொல்லச் செல்வார்கள். ஆனால், அதற்கு முன்பாக தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என தலைவர் விஜய் தெரிவித்தார். அதன்படி இன்று வில்லிவாக்கம் தொகுதியில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. எந்த விதமான டெண்டர்களிலும் கமிஷன், ரெக்கமண்டேஷன் இருக்கக்கூடாது என முதலமைச்சர் விஜய் கூறி இருக்கிறார். முன்பு இருந்த ஆட்சியில் 40 முதல் 50 சதவீதம் கமிஷன் இருந்தது, தற்போது தவெக அரசில் 0% கமிஷன் தான். தவெகவினர் எந்த டெண்டரும் எடுக்கக்கூடாது. டாஸ்மாக் மதுபான கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடு குறித்து முதல்வர் விஜய் முடிவெடுப்பார்.
கோப்புகளின் தேக்கத்தை கண்டறியும் பொருட்டு கண்காணிக்கப்படும். தவெக பெயரை சொல்லியோ, என் பெயரை சொல்லியோ அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம். முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் எண்ணம் இல்லை. தோல்வி விரக்தியில் உதயநிதி பேசுகிறார். அனைத்து தெருக்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொறுத்துவது குறித்து மாநகராட்சியிடம் ஆலோசித்துள்ளோம். கள்ள சந்தையில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

