#BREAKING “கரூர் சதி போல கொளத்தூரில் துயர சம்பவம் நடத்த ஸ்டாலின் திட்டம்”- ஆதவ் அர்ஜூனா
இன்னும் இரண்டு முறை விஜய் கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்தார் என்றால் இந்த தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்து விடுவார் என ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் பரப்புரைக்கு காவல் துறையின் பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக ஆதவ் அர்ஜூனா, பொதுச் செயலாளர் (தேர்தல் மேலாண்மை) போயஸ் கார்டன் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஆதவ் அர்ஜூனா, “இன்னும் இரண்டு முறை விஜய் கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்தார் என்றால் இந்த தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்து விடுவார். இந்த தோல்வி பயத்தின் காரணமாக கடந்த 8 மாதங்களாக எங்களை முடக்கிவருகிறார்.கரூர் பிரச்சார்த்துக்கு பின்னர் எங்களுக்கு எங்குமே காவல்துறை அனுமதி கொடுப்பதில்லை.
கரூர் துயர சம்பவத்தை போன்று கொளத்தூரிலும் இன்று ஒரு பெரும் துயர சம்பவத்தை நடத்த முதல்வர் முக ஸ்டாலின் திட்டமிட்டு இருந்தார். எங்கள் தலைவர் விஜய் பேசும் பொழுது கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்காமல் இருக்க வைத்து அதன் மூலம் எங்கள் தலைவர் மீது பழியை போட முதல்வர் சதி செய்கிறார். கொளத்தூரில் மக்கள் அலையை பார்த்த பின்னர், தலைவர் அவர்களுக்கு பேசவே மனம் வரவில்லை, பாதியில் முடித்து விட்டு கெளம்பி விட்டோம். 2ஆயிரம் பேர் நிற்கவேண்டிய இடத்தில் 15 ஆயிரம் பேர் நின்றார்கள். இதனை பார்த்த விஜய், உடனே பிரச்சாரத்தை முடித்துவிடலாம் எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். கொளத்தூரில் இன்று மக்களுக்கு ஏதேனும் உயிர் இழப்பு ஏற்பட்டிருந்தால், அதற்கு யார் பொறுப்பு ஏற்கப் போகிறார்கள்?எனவே, மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, இன்று எங்கள் பிரச்சார நடவடிக்கைகளை நிறுத்திவிட்டோம். வில்லிவாக்கம் மற்றும் அண்ணா நகர் தொகுதிகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
போக வேண்டிய எல்லா டூர் ப்ரோக்ராம்களும் தயார் செய்யப்பட்டுவிட்டன. பெர்மிஷன்கள் கேட்டு விண்ணப்பித்து வருகிறோம். ஆனால் பெர்மிஷன் கேட்டவுடன், தலைவர் தேர்தல் ஆணையத்தைப் பார்த்துவிட்டு வந்த பிறகே பெர்மிஷன் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள்.பெர்மிஷன் கொடுக்கும் இடத்தில் நானே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது. நான் காவல்துறையைப் பற்றி குற்றம் சாட்டவில்லை. ஒட்டுமொத்த காவல்துறையையும் குறை சொல்லவில்லை. பெரம்பூரில் மிக நல்ல முறையில் பணியாற்றினார்கள். வில்லிவாக்கத்திலும் சிறப்பாக ஒருங்கிணைத்து ஆர்கனைஸ் செய்திருந்தார்கள் என்று எங்கள் மாவட்ட செயலாளர் அறிக்கை அளித்தார். ஆனால் கொளத்தூரில் ஜீரோ பிரசன்ஸ் இருந்தது. கொளத்தூரில் சாலைகளுக்கு எந்தவிதமான ஏற்பாடும் செய்யப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒவ்வொரு இடத்துக்குச் செல்லும்போதும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எங்களுக்கு உடனடியாகப் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டி இருக்கிறது. எங்களுக்கு ஜனநாயகக் கடமை உள்ளது,மக்கள் மீது எங்களுக்கு அன்பு உள்ளது. எனவே இனிமேல் இத்தகைய சம்பவங்கள் நடைபெறக் கூடாது. நாளை காலையில் நாங்கள் சென்று முறையிடுவோம். கண்டிப்பாக நல்ல முடிவு வரும் என்று நம்புகிறோம்.முக்கியமாக, போலீஸ் ஆபீசரை மாற்ற வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை மிகக் கடுமையாகவும் அழுத்தமாகவும் முன்வைப்போம் என்பதே எங்களுடைய முக்கிய வேண்டுகோள்.
” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

