இங்கு மக்களாட்சி நடக்கிறதா? மாஃபியாக்களின் ஆட்சி நடக்கிறதா?- ஆதவ் அர்ஜூனா

 
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா

செய்தியாளர்களைத் தாக்கிய வன்முறை கும்பலை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தியுள்ளார்.

ஆதவ் அர்ஜூனா

இதுதொடர்பாக ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தளத்தில், “கரூர் மாவட்டத்தில் குவாரிகளில் அரசு அனுமதித்த அளவை விட சட்டவிரோதமாக அதிக அளவு மணல் அள்ளிவருவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அதனை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நோக்கில் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் செய்தியாளர் திரு. கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. செபாஸ்டின் ஆகியோரை, ஆளுங்கட்சி எம்எல்ஏ ஆதரவாளர்கள் என்று சொல்லப்படும் குவாரி கும்பல் மோசமாகத் தாக்கி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து மணல் திருட்டும், இயற்கைவள சுரண்டலும் கட்டுக்கடங்காமல் நடைபெற்று வருகிறது. இதே மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளி, கடந்த தேர்தல் பிரச்சாரத்திலேயே அதனை ஊக்குவித்துப் பேசியதை நாம் கண்கூடாகப் பார்த்தோம். திமுக அரசு இதனை வேடிக்கை பார்த்து வரும் நிலையில், இதனைத் தட்டிக்கேட்கும் சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள் ஆகியோர் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் பதற்ற நிலைமையிலேயே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு இலட்சணம் இருக்கிறது. இன்று, பத்திரிக்கையாளர்கள் வரை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைமை, இங்கு மக்களாட்சி நடக்கிறதா? அல்லது மாஃபியாக்களின் ஆட்சி நடக்கிறதா? என்று மக்களைக் கேட்க வைத்துள்ளது. செய்தியாளர்களைத் தாக்கிய வன்முறை கும்பலை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். குற்றவாளிகள் மீது தொடர்ந்து அலட்சியம் காட்டி வரும் இந்த அரசை மக்கள் தூக்கியெறியும் நாள் தொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.