#JUSTIN "காவிரி உரிமையை விட்டுத்தர மாட்டோம்; காவிரி நீர் உரிமை அரசியல் அல்ல"- ஆதவ் அர்ஜூனா
தமிழகத்தின் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை த.வெ.க அரசு மீட்கும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தளத்தில், “காவிரி நீர் உரிமையும்… தமிழகத்தின் வாழ்வுரிமையும்! முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை குறித்த பிரச்சினை தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனும் அடிப்படையில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது உண்மைக்கு முரணானதாகும். காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம், மாநிலத்தின் குடிநீர் பாதுகாப்பு மற்றும் தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நீர் உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு தொடர் மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 27.05.2026 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து, காவிரி நீர் பகிர்வு தொடர்பாக தமிழ்நாட்டின் உரிமைகள், கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டம் மற்றும் அதனால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் 16.02.2018-ஆம் நாள் தீர்ப்பும் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், மேகதாது அணைத் திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, 19.06.2026 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரிவான கடிதம் (D.O. No.48/2026) அனுப்பினார். அக்கடிதத்தில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்திற்கான பூமி பூஜையை நடத்தவுள்ளதாக அறிவித்திருப்பது, காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று வழங்கிய தீர்ப்பிற்கும், மாண்புமிகு உச்சநீதிமன்றம் 16.02.2018 அன்று வழங்கிய இறுதித் தீர்ப்பிற்கும் முற்றிலும் முரணானது என்பதை சுட்டிக்காட்டினார். மேலும், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் இத்திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும், ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் மத்திய நீர்வள ஆணையத்திற்கு இதுகுறித்து உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார். அதே நாளான 19.06.2026 அன்று, கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் ஒருதலைப்பட்ச முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு (DPR) ஜல் சக்தி அமைச்சகம் எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தகராறு சட்டம், 1956-இன் பிரிவு 4-ன் கீழ் நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், கர்நாடக அரசின் DPR-ஐ மத்திய நீர்வள ஆணையம் பரிசீலிக்கவோ, செயல்படுத்தவோ அல்லது அதற்கு ஒப்புதல் வழங்கவோ கூடாது என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் மேகதாது அல்லது காவிரி ஆற்றுப்படுகையில் வேறு எந்த இடத்திலும் புதிய அணை அல்லது நீர்த்தேக்கத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் D.O. No.48/2026 கடிதம் மூலம் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு அனுப்பி வைத்து, தமிழ்நாடு சட்டமன்றம் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு நீர்வளத்துறை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) கூட்டங்களில் தொடர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளை வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டிற்குரிய நீரை உரிய காலத்தில் திறந்துவிட வேண்டும் என்பதையும், கர்நாடக அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.எனவே, தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நீர் உரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அனைத்து நடவடிக்கைகளையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முதலமைச்சர் பொறுப்பில் இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க ஆட்சியில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயார் செய்த நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் 13.11.2025 அன்று தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, அன்றைய தி.மு.க அரசு, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த சீராய்வு மனுவும் 15.04.2026 அன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, மறுசீராய்வு மனுவை அன்றைய தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தமிழக உரிமைக் காக்கும் கடைசி வாய்ப்பாக இருந்த அந்த மனு மீதும் கவனமாக, உரிய வாதங்களை வலுவாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தி.மு.க அரசு எடுத்து வைக்கவில்லை. அதையடுத்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, மறு சீராய்வு மனுவையும் 25.04.2026 அன்று தள்ளுபடி செய்தது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற இதுபோன்ற சட்டக் குளறுபடிகளால்தான், தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நநி நீர் பிரச்சினையும், மேகதாது அணை விவகாரமும் இன்றைக்கு மிகப்பெரிய சோதனையாக உருவெடுத்துள்ளது.
இதுபோன்ற கடந்தகால குளறுபடிகளைப் பேசுவதன் மூலம், காவிரி நதி நீர் விவகாரத்தில், மேகதாது அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக் குரலை திசைதிருப்ப நாங்கள் விரும்பவில்லை. அப்படிப்பட்ட குறுகிய அரசியல் நோக்கம் எங்களுக்குக் கிடையாது. அதே நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல... வேறு யாரிடம் இருந்தும்... ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வந்தால், அவற்றை கருத்தில் கொள்வதற்கும், கவனப்படுத்துவதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அதை முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். காவிரி நீர் உரிமை என்பது அரசியல் சார்ந்த பிரச்சனை அல்ல; அது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமை, டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் மற்றும் மாநிலத்தின் நீராதார பாதுகாப்புடன் தொடர்புடைய அடிப்படை உரிமைப் பிரச்சினையாகும். அதில், எந்தவித குறுகிய அரசியல் நோக்கத்தோடும், அரசியல் ஆதாயத்தின் கணக்குகளோடும், மாண்புமிகு முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு செயல்படவில்லை. மாறாக, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் முழுமையாக அமல்படுத்தப்படும் வரையிலும், தமிழ்நாட்டின் உரிமை முழுமையாக நிலைநாட்டப்படும் வரையிலும், சட்டப்பூர்வமான மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் தொடர்ந்து முன்னெடுக்கும். காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைக் காக்கும்! தமிழகத்தின் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

