“ஸ்டாலினுக்கு பயம்... நேற்று மாலையிலிருந்தே சென்னையுடைய பேருந்து நிலையங்கள் முடக்கப்பட்டன”- ஆதவ் அர்ஜூனா
வாக்காளர் வருகையை அதிகரிக்கச் செய்வதைத் திமுக தவிர்த்ததாகவும், சிறப்புப் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்யத் தவறியதாகவும் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜூனா, “மு.க.ஸ்டாலின் அவர்களின் பயம் என்னவென்றால் அதிகமான மக்கள் வந்து ஓட்டளித்தால் படுதோல்வி அடைவார் என்பதால் ஒரு சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அவருடைய ஆதாயத்திற்காக உபயோகபடுத்துகிறார். தமிழகப் போக்குவரத்துத் துறை செயலாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? நாங்கள் நிறைய தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் பேசினோம். அவர்களே பொங்கல், தீபாவளியின் போது போக்குவரத்துத் துறை வேகமாக இயங்கும். ஆனால், இப்போது முடங்கி போய் உள்ளது என்று சொல்கிறார்கள். கொரோனா லாக் டவுன்னில் நின்றது போல் மக்கள் இரவெல்லாம் பேருந்திற்காக நிற்கிறார்கள். சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு சென்று தங்களுடைய ஜனநாயக கடமையாற்ற மக்கள் அணி திரண்டு ஒரு விரல் புரட்சியாக 90 சதவீத வாக்குகளை செலுத்த வருகிறார்கள். நேற்று மாலையிலிருந்தே சென்னையுடைய பேருந்து நிலையங்கள் முடக்கப்பட்டன. பொங்கல், தீபாவளியை விட அதிகமான பேருந்து வசதிகள் செய்யபட்டிருக்க வேண்டும். இப்போது கூட 30,000 - 40,000 மக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். காவல்துறை எந்த இடத்திலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.

