“விஜய் அடுத்த 25 ஆண்டுக்கான தேர்தல் வாக்குறுதியை வெளியிடுவார்”- ஆதவ் அர்ஜூனா
பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இணைப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலந்துகொண்ட தமிழக வெற்றிக்கழக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்வது எதிர்பார்த்ததுதான். எல்லா ஆடுகளும் வாங்கப்படுவது வெட்டப்படுவதற்காக தான். எல்லா கட்சி வீட்டுக்குள்ளேயும் தமிழக வெற்றி கழகம் உள்ளார்கள். இப்போது உருவாகும் கூட்டணியில் உடல் இருக்கிறது, ஆனால் முகம் இல்லை. முகமும் மூளையும் இல்லாத எந்த உடலும் கோமா நிலைதான். இங்குள்ள அனைத்து கூட்டணியும் மக்களோடு இணைந்தது இல்லை நாங்கள் மக்களோடு இருக்கிறோம். நாங்கள் எத்தனை சதவீதம் வாக்குகளை பெறுகிறோம், அழுத்தத்திற்கு பயந்தீர்களா என்ற கற்பனை கதைகளுக்கு பதில் சொல்ல நேரமில்லை, எல்லாவற்றிற்கும் தேர்தலில் பதில் சொல்வோம். ஆறு மாவட்டத்திலேயே மக்கள் வெள்ளத்தை தமிழக காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. திருவாரூர் தமிழக வெற்றிக்கழக கூட்டமே திமுக தோல்வியை தெரியப்படுத்திவிட்டது. எங்கள் தலைவரும், கட்சியும் யாருக்கும் அடிபணிந்ததாக வரலாறு இல்லை சரித்திரமும் இல்லை. மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள் எங்கள் தலைவர் முதலமைச்சராக வருவார்.
தலைவர் விஜய் அடுத்த 25 ஆண்டுக்கான தேர்தல் வாக்குறுதியை வெளியிடுவார். இத்தனை வருடங்களாக வழங்காத லேப்டாப்பை இப்போது வழங்குவது தேர்தலுக்காக என மக்களுக்கு நன்றாக தெரியும். என்னென்ன வாக்குறுதி நிறைவேற்ற முடியுமோ அந்த வாக்குறுதியை தலைவர் சொல்வார் அதை நிறைவேற்றுவார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனுக்கு வாழ்த்துகள். 2026 கூட்டணிக்கான அரசியல் கிடையாது. ஜெயலலிதாவும் கருணாநிதியும் இறந்த பிறகு இரண்டு கட்சியின் தலைமை மீதும் மக்கள் மிகப்பெரிய வெறுப்பை சம்பாதித்துள்ளார்கள். நம்பிக்கை இல்லாத தலைவர்கள் ஒரு கூட்டணியை உருவாக்கும் போது அது சார்ந்த தலைவர்களும் மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க முடியாது. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் மக்களின் ஈர்ப்பை இழந்துள்ளார்கள். தமிழக வெற்றி கழகம் மிகவும் அமைதியாக தனக்கான பணிகளையும், தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்குறுதியை உருவாக்குவதிலும் இணைப்பு விழாவிலும் முக்கியத்துவத்தை கொடுத்து நடத்தி வருகிறோம். விரைவில் கட்சியின் கூட்டம் நடைபெற உள்ளது. கூடிய விரைவில் ஈரோட்டில் எப்படி பிரச்சாரம் நடந்ததோ, அதுபோல தமிழகம் முழுவதும் தலைவர் பிரச்சாரம் நடைபெற உள்ளது. திமுக மாவட்ட செயலாளர் வீட்டில் மாவட்ட செயலாளரின் மனைவி, குழந்தைகள் டிவிகேவுக்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள். தமிழக வெற்றி கழகத்தில் பெண்கள், இளைஞர்களின் வாக்கு 70,80 சதவீதத்தை தாண்டி செல்கிறது. ஆட்சியில் இருந்தவர்கள் எதுவும் செய்யவில்லை, இப்போது இருப்பவர்களும் எதுவும் செய்யவில்லை. எங்கள் தலைவர் சொல்வதை செய்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. கரூர் சிபிஐ வழக்கில் யார் குற்றவாளி என்பது எங்களுக்கு தெரியும், அதற்கான எல்லா சாட்சிகளையும் கொடுத்து குற்றவாளிகளை நிரூபிப்பதில் நாங்கள் போராடுவோம்” என தெரிவித்தார்.


