அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சுக்கு ஆதவ் அர்ஜுனா கண்டனம்!
மத்திய உள்துறை அமைச்சர் அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது' என்று நாடாளுமன்றத்திலேயே பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆட்சிக்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'சும்மா அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொன்னால் சொர்க்கம் செல்ல முடியாது. அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது' என்று நாடாளுமன்றத்திலேயே பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அந்த அம்பேத்கர் கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டம்தான் பிரதமர், உள்துறை அமைச்சர் உட்படப் பல ஏழைத்தாயின் மகன்களும் அரசியல் அதிகாரத்தை அடையக் காரணம்.
அதுவே, இன்று அனைவரும் பரவலாக அரசியல் உரிமைகளைப் பெற வழிவகுத்தது. கடவுளின் பெயரைச் சொல்லி சொர்க்கம் செல்பவர்கள் செல்லட்டும். ஆனால், புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்த சட்டத்தின் வழியில் சட்டமன்றம், நாடாளுமன்றம் சென்று மக்களுக்கான அதிகாரத்தை வென்றறெடுக்கவும்,எல்லோருக்குமான அரசு, சமதர்ம சமூகத்தை உருவாக்கவும் அரசியல் அமைப்பு காட்டிய சட்ட வழியில் பயணிப்போம். எனவே நாங்கள் உரக்கச் சொல்கிறோம், வாழ்க புரட்சியாளர் அம்பேத்கர் என குறிப்பிட்டுள்ளார்.