ஆதார் கார்டை புதுப்பிக்க டிசம்பர் 14 வரை கால அவகாசம் நீட்டிப்பு..!
ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14 வரை நீட்டிப்பு செய்து ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. தார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை மறுநாள் உடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 3 மாத கால அவகாசத்துடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. சில தங்களது முகவரி மற்றும் செல்போன் எண் போன்றவற்றை மாற்றியிருப்பார்கள்; அதேபோல் சிலருக்கு முக அமைப்புகள் மாறி இருக்கும் மற்றும் கைரேகைகள் தேய்மானம் எடைந்திருக்கும் என்பதால் அதனை புதுப்பிக்க வேண்டும் என கூறப்படுகிறது. இதற்காக பத்து ஆண்டுகள் நிறைவடைந்தவர்களுக்கு ஆதார் ஆணையம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். அவர்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களில் தங்களது ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம். அப்போது புதிய புகைப்படங்களை மாற்றுவது, முகவரி மற்றும் தொலைபேசி எண்களை மாற்றுவது, கைரேகையை புதிதாக பதிவு செய்வது போன்றவற்றை செய்து கொள்ளலாம்.
இந்நிலையில் ஆதாரை புதுப்பிக்க வருகின்ற 14ஆம் தேதி ( நாளை மறுநாள்) வரை தான் கால அவகாசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆதார் அட்டையை புதுப்பித்துள்ளனர். 14ம் தேதிக்குள் பொதுமக்களே நேரடியாக ஆதார் இணையதளத்தில் முகவரி உள்ளிட்ட ஆவணங்களை கட்டணமில்லாமல் பதிவேற்றிக் கொள்ளலாம் எனவும், 14ஆம் தேதிக்குப்பின் இந்த சேவைக்கு 50 ரூபாய் கட்டண செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான கால அவகாசம் டிசம்பர் 14ம் தேதி வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும், புதுப்பிக்காமல் இருக்கும் பட்சத்தில் சேவைகள் எதுவும் பாதிக்கப்படாது என்றும் ஆதார் ஆணையம் தெளிவு படுத்தியுள்ளது.