அடடே..! ஆவடி நூலகத்தில் ஜெம் வீரமணி தலைப்பில் புத்தகம்..!
ஆவடி நூலகத்தில் 'ஜெம் வீரமணியின் பயணங்கள் - பாடங்கள்' என்ற தலைப்பில் புத்தகம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜெம் வீரமணி பெயரில் புத்தகம் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே நூலகங்களுக்கு தரமற்ற புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகச் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தற்போது இந்த விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கோயம்புத்தூர் பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல் விவகாரம் மற்றும் போலிப் பதிப்பகங்களின் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ள சூழலில், நூலகங்களில் இடம்பெற்றுள்ள புத்தகங்களின் தரம் மற்றும் பின்னணி குறித்த விவாதங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நூலகங்கள் மற்றும் அறிவுலக மையங்களுக்குப் புத்தகங்களைத் தேர்வு செய்து வழங்குவதில் முறையான நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதற்கு ஆவடி நூலக நிகழ்வு ஒரு சான்றாக முன்வைக்கப்படுகிறது.
போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்ட ஜெம் வீரமணி எழுதிய ‘பயணங்கள் பாடங்கள்’ என்ற தலைப்பிலான புத்தகம் ஆவடி நூலகத்தின் அலமாரிகளில் இடம்பிடித்துள்ளது.
குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டில் போக்சோ வழக்கில் சிக்கிய ஒருவரின் புத்தகம் பொது நூலகத்தில் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

