“எனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டுங்கள்” நண்பர்களுக்கு மெசேஜ் செய்துவிட்டு இளைஞர் தற்கொலை

போஸ்டர் அடித்து ஒட்டுங்கள் என உருக்கமாக நண்பர்களுக்கு வாட்ஸ்-அப் மெசேஜ் அனுப்பி விட்டு, தற்கொலை செய்து கொண்ட 20 வயது இளைஞரின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் குகை பகுதியைச் சேர்ந்தவர் சாதிக். இவருடைய மகன் பயாசுதீன்(20). இவர் செவ்வாய்பேட்டையில் உள்ள வெள்ளிப்பட்டரையில் வேலை பார்த்து வந்தார். ஒன்பதாம் வகுப்பு வரை படித்துவிட்டு பள்ளிக்கு செல்லாமல் ஊரை சுற்றி வந்த பயாசுதீனை, வெள்ளிப்பட்டறை வேலைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் வேலைக்கும் செல்லாமல் சுற்றி திரிந்துள்ளார். இதனால் அவரது தாய், சரியான முறையில் படிக்கவும் இல்லை, வேலைக்கும் செல்லாமல் இருக்கிறாயே என கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து தனது பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்ற பயாசுதீன், நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இதனால் தாய் மற்றும் உறவினர்கள் அவரை தேடினர். இரவு 9 மணிக்கு பிறகு அவரது அண்ணன் மற்றும் நண்பர்கள் சிலருக்கு வாட்ஸ் அப்பில் பயாசுதீனிடமிருந்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் தான், ஏற்காட்டிற்கு சென்று விஷம் குடித்து விட்டதாகவும், கீழே இறங்குவதற்குள் இறந்து விடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். உடனே அவரது நண்பர்கள், உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு ஏற்காட்டிற்கு பைக்குகளில் விரைந்தனர். இரவு 10 மணி அளவில் மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் சாலையோரம் பைக்கை நிறுத்திவிட்டு, அதன் அருகில் மயங்கிய நிலையில் பயாசுதீன் கிடப்பதை பார்த்தனர்.
உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து விட்டு, பயாசுதீனை தங்கள் பைக்கில் ஏற்றிக்கொண்டு கீழே இறங்கினர். அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடி பகுதியில் வந்த போது, எதிரே 108 ஆம்புலன்ஸ் வந்தது. உடனே அதனை நிறுத்தி, பயாசுதீனை ஏற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த ஏற்காடு இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சேலம் அரசு மருத்துவமனையில் இருந்த பயாசுதீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார், நண்பர்களுக்கு அனுப்பிய மெசேஜை பார்த்துள்ளனர். அதில், “தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து விட்டேன். அதனால் மருந்தை குடித்துவிட்டு ஏற்காட்டிற்கு வந்து விட்டேன். மீண்டும் கீழே இறங்குவதற்குள் இறந்து விடுவேன். அப்படி நான் இறந்து விட்டால் செவ்வாய்பேட்டை பகுதியில் போஸ்டர் அடித்து ஒட்டுங்கள், நல்ல முறையில் அடக்கம் செய்யுங்கள். நான் சைனஸ் நோயால் அவதிப்பட்டு வந்தால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஏற்கனவே இரண்டு முறை எலி மருந்து சாப்பிட்டும் தப்பித்து விட்டேன். இப்போது எப்படி சாவது என்று தெரிந்து கொண்டேன். அந்த மருந்தை குடித்து இருக்கிறேன்” என மெசேஜ் அனுப்பி இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட , அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.