அரக்கோணம் அருகே 2 மகன்களுடன் ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை!
அரக்கோணத்தில் கல் உடைக்கும் கூலி தொழில் செய்து வந்த பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த வட மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் கீழே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வள்ளி (26) என்ற பெண், தனது இரண்டு ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது கணவர் கோட்டையன் (30). வள்ளிக்கும், கோட்டையனுக்கும் கடந்த 8ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு பரத் என்கின்ற 7வயது சிறுவன் மற்றும் சந்தோஷ் என்கின்ற 3 வயது குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கூலித் தொழில் காரணமாக குடும்பத்துடன் அரக்கோணம், வடமாம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கம்மா பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோட்டையன் உடல்நிலை குறைவால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இதையடுத்து கல் உடைக்கும் தொழில் செய்து தனது இரு ஆண் குழந்தைகளையும் காப்பாற்றி வந்த நிலையில் அந்த பெண் கணவர் இறந்த துக்கம் தாளாமல் 2 குழந்தைகளுடன் அருகில் உள்ள அரக்கோணம் திருத்தணி செல்லும் ரயில் பாதையில் சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தானூர் ரயில் நிலையம் செல்லக்கூடிய ரயில் முன்பாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த உடல்களை கைப்பற்றிய அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

