கழுத்தில் தொங்கிய புகைப்படம்... நடந்தே பனையூர் பயணம்- விஜய்க்கு ஷாக் கொடுத்த ரசிகர்!

நடிகர் விஜய்யை சந்திக்க கேரளாவிலிருந்து கடந்த 34 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டுவரும் வாலிபரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் பாலகாடு மாவட்டம் மங்கனம் டேம் பகுதியை சேர்ந்தவர் உண்ணிகண்ணன் (வயது 30). இவர் மலையாள திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மலையாளம் பேசுபவராக இருந்தாலும் தமிழ் திரைப்படங்கள் மீது அதிக காதல் கொண்டவராக இருந்தார். குறிப்பாக திரைப்பட நடிகரும்- தமிழக வெற்றி கழக நிறுவன தலைவர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். அவரை காண நீலாங்கரையிலுள்ள அவரது வீட்டிற்கு பலமுறை சென்று அவரை சந்திக்க முடியாமலும், அவர் வீட்டின் கேட் அருகே படுத்து உறங்கியும் இருந்துள்ளார். மேலும் விஜய் கட்சி மாநாட்டிற்கும் சென்று அவரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் அவரை நேரில் சந்தித்து உரையாடி அவருடன் ஒரு புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என்ற வைராக்கியத்துடன் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி தனது சொந்த ஊரிலிருந்து விஜய்யை காண நடைபயணம் மேற்கொண்டார் . 34-வது நாளான இன்று செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே வந்தவரிடம் இதுகுறித்து கேட்டபோது விஜய் என் அண்ணன் மற்றும் தந்தை போன்றவர். அவர் மீது அதிக மரியாதையும் அன்பும் வைத்துள்ளேன், அவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நடைபயணமாக வருவதாக தெரிவித்தார். மேலும் அவரை சந்தித்தபிறகு மொட்டையடித்து கொள்ளபோவதாகவும் தெரிவித்தார்.