மனைவி பிரிந்து சென்றதால் வீட்டின் படியில் குழந்தையை அமர வைத்துவிட்டு கிணற்றில் குதித்த இளைஞர்!

மானூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த வாலிபர் 3 வயது மகளை வீட்டின் படியில் வைத்துவிட்டு கிணற்றில் குதித்து தனது உயிரை மாயத்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகேயுள்ள அயூப்கான்புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் குமார் (33). இவரது மகள் சுபஸ்ரீ (3). குமார் ஓராண்டுக்கு மேலாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் தனது 3 வயது பெண் குழந்தையை தாய் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வளர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் குமாரின் மனைவி வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டதாகவும், இதனால் குமாருக்கு 2வது திருமணத்திற்கு அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் மனைவி பிரிந்து சென்றதாலும், தனது 3 வயது குழந்தை தாய் இல்லாமல் சிரமம் அடைந்த வருவதையும் பார்த்து அவர் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் குமார் நேற்று தனது குழந்தை சுபஸ்ரீயுடன் ஊரிலிருந்து மாயமானார். இருவரையும் குமாரின் தந்தை மாரியப்பன் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் மானூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரையும் தேடி வந்தனர். அதோடு குமாரின் உறவினர்கள் அவர் ஏதேனும் வயல்வெளியில் தனிமையில் இருக்கிறாரா? என மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேடினர். அப்போது நேற்று இரவு அங்குள்ள கிணற்று படியில் குழந்தை அழும் சப்தம் கேட்டு குமாரின் உறவினர்கள் அங்கு சென்றனர். அப்போது குழந்தை சுபஸ்ரீ மட்டும் தனியாக அழுது கொண்டிருந்தைப்பார்த்து அவர்கள் குழந்தையை மீட்டனர். அருகில் உள்ள கிணற்றில் தேடிப் பார்த்த போது உயிரிழந்த நிலையில் சடலமாக ஒரு உடல் கிடந்தது. இது தொடர்பாக மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்குச் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் விரக்தியில் தற்கொலை செய்ய குழந்தையுடன் கிணற்றுக்குச் சென்ற குமார் கடைசி நேரத்தில் மகளை படியில் வைத்துவிட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.