காதலித்த பெண்ணிற்கு வேறு இடத்தில் நிச்சயதார்த்தம்- காதலன் தற்கொலை

 
death

காதலித்த பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்ய நிலையில், மணமகன் வீட்டருகே காதலன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காதலன் தற்கொலை செய்து கொண்டதால் விரக்தி: காதலியும் தீக்குளித்து தற்கொலை


கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி அம்மன் திடலை சேர்ந்தவர் சுந்தரவேல் (22). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அதே மருத்துவமனையில், சுவாமிமலை அருகே மருத்துவக் குடியை சேர்ந்த துர்காதேவி என்பவர் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரவேலுவிற்கும் துர்காதேவிக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சுந்தரவேலு வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும்,துர்கா தேவி தாழ்த்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.  இதற்கிடையில் துர்காதேவிக்கும் ஏரவாஞ்சேரியை சேர்ந்த ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுந்தரவேலு திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியில் உள்ள மணமகன் வீட்டின் அருகே மர்மமான முறையில் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

சுந்தரவேலுவின் பெற்றோர்களை எரவாஞ்சேரி காவல்துறையினர் அழைத்து சுந்தரவேலு தற்கொலை செய்து கொண்டதாக  கையெழுத்து பெற்றதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உறவினர்களின் ஒப்புதல் இல்லாமல் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டதால் உறவினர்கள் சுந்தரவேலுவின் உடலை பெற்றுக் கொள்ள மறுத்ததுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறிது நேரம் கும்பகோணம் அரசு மருத்துவமனை வாயிலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.