"விஜய்யை நம்பி ஓட்டு போட்டேன்... தவெக என்பதால் நடவடிக்கை இல்லை”- தவெக நிர்வாகியால் பாதிக்கப்பட்ட பெண் கதறல்

 
s

ராணிப்பேட்டை மேற்கு தவெக மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மீது பாலியல் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பாதிக்கப்பட்ட பெண் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

தவெக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரான ‘விஜய்’ மோகன் மீது கட்சி பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் தொல்லை மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாக பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மாதவிடாய் (Periods) நேரத்திலும் கூடத் தனக்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தொல்லை கொடுத்து, எல்லை மீறி நடந்துகொள்ள முயன்றதாக அவர் அடுக்கடுக்கான புகார்களைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜூலை 22ஆம் தேதி முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்தார். 23ஆம் தேதியே FIR போடப்பட்டதாகவும், ஆனால் இதுவரை விஜய் மோகன் கைது செய்யப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் இரண்டாவது முறையாக புகார் அளித்துள்ளார். ராணிப்பேட்டை காவல்துறையினர் விஜய் மோகனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள பேட்டியில்,  “விசாரணைக்கு போலீஸ்க்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். என்னுடைய போனை காவல்துறையினர் கேட்டனர். அதனால் நான் கொடுத்துவிட்டேன். சாதரணமாக பேசினாலே காவல்துறை கைது செய்கிறது. ஆனால் விஜய் மோகன் பாலியல் டார்ச்சர் செய்திருக்கிறார். ஆனால் ஏன் அவரை கைது செய்யவில்லை. இதற்கு என்ன நியாயம்? எனது கணவன் வேலைக்கு செல்லும்போது மிரட்டல் விடுக்கின்றனர். விஜய் அண்ணாவை நம்பிதான் ஓட்டுப்போட்டோம். ஆனால் அதற்காக நியாயம் எங்களுக்கு கிடைக்கவில்லை. விஜய் மோகன் மீது தவெக என்பதால் நடவடிக்கை இல்லை. அவரது கட்சிக்காரர் என்பதால் விஜய் காப்பாற்றுகிறாரா என தெரியவில்லை” என்றும் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.