இன்ஸ்டா காதலனுக்காக கணவரை கைவிட்டு அசாமிலிருந்து கடலூருக்கு வந்த பெண்!
அசாம் மாநிலத்தில் கணவரை கைவிட்டு கடலூரில் வந்து மேற்கு வங்க வாலிபரை திருமணம் செய்த பெண்ணின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளம் மெகன்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மலிக்கான் (24). இவர் கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சுஷ்மிதா பால் (20). இவர்கள் 2 பேருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஒருவருக்கொருவர் பேசி காதலிக்க தொடங்கினர். அதன்பிறகு மலிக்கான், சுஷ்மிதாபால் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி ஏற்கனவே திருமணம் ஆன சுஷ்மிதா வீட்டை விட்டு வெளியேறி கடலூர் வந்து விட்டார். இங்கு அவர்கள் கடந்த மாதம் 1-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டு, புதுப்பாளையத்தில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் தனது பெண்ணை காணவில்லை என்று சுஷ்மிதாபாலின் தந்தை அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சுஷ்மிதாபாலின் செல்போன் மூலம் கடலூரில் இருப்பது தெரிய வந்தது. அதன்படி அசாம் மாநிலத்தில் இருந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார், சுஷ்மிதாபாலின் தந்தை ஆகிய 4 பேர் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு வந்து, தகவலை தெரிவித்தனர். இதையடுத்து கடலூர் புதுநகர் போலீசார் உதவியுடன், அசாம் மாநில போலீசார் புதுப்பாளையத்திற்கு சென்று, அங்கிருந்த சுஷ்மிதா பால், மலிக்கான் ஆகிய 2 பேரையும் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர்.
விசாரணையில், சுஷ்மிதா பால், அவரது தந்தையுடன் செல்ல மறுத்து விட்டார். தான் ஒரு மாதம் கர்ப்பிணியாக இருப்பதாகவும் தன்னுடைய கணவருடனே தான் வாழ விருப்பப்படுவதாகவும் சுஷ்மிதா தெரிவித்தார். நீண்ட நேரம் நடந்த பாச போராட்டத்திற்கு பிறகு, மலிக்கானுடன் சுஷ்மிதாபாலை அசாம் போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் தாங்கள் இங்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் சுஷ்மிதா பால் அசாம் போலீசாருக்கு கடிதம் எழுதி கொடுத்துவிட்டார். இருந்தாலும் சுஷ்மிதாவின் தந்தையும் அசாம் போலீசாரும் இன்னும் ஒரு நாள் தங்கி பார்ப்போம் சுஷ்மிதாபாலின் மனம் மாறுகின்றதா என்று பார்க்கும் எண்ணத்தில் கடலூரிலேயே தங்கி உள்ளனர்.