"நாங்க இலவசம் கேட்டோமாங்க! பொம்பளைய மதிக்கிறதே இல்ல"- நடுரோட்டில் கதறும் பெண்

 
s

எங்களுக்கு இலவசப் பயணம் வேண்டாம் , பயணம் வேண்டும் என்றாலும் வாங்கி கொள்ளுங்கள் ஆனால் பெண்களை மதித்து பேருந்து  நிறுத்தத்தில் முறைப்படி நிறுத்தி ஏற்றி செல்லுங்கள் என ராமநாதபுரத்தில் பெண் ஒருவர் கண்ணீருடன் கூடிய வீடியோ வைரலாகிவருகிறது.



ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் இருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து, பயணிகள் நிற்கும் இடத்தில் நிற்காமல் சென்றுள்ளது. கூலி வேலை முடித்து வீடு திரும்ப முயன்ற பெண்மணி ஒருவர், பேருந்தை பிடிப்பதற்காகப் பின்னாடியே தொடர்ந்து ஓடிவந்துள்ளார். இருப்பினும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால் மனவேதனையடைந்த அப்பெண், ஒரு ஆட்டோவைப் பிடித்துப் பின்தொடர்ந்து சென்று பேருந்து நிலையத்தில் பேருந்தை மறித்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "எங்களுக்கு இலவசப் பயணம் வேண்டாம், பணம் வேண்டும் என்றாலும் வாங்கிக்கொள்ளுங்கள்! ஆனால் பெண்களை மதித்து பேருந்து நிறுத்தத்தில் முறைப்படி நிறுத்தி ஏற்றிச் செல்லுங்கள். இதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்" என அப்பெண் கண்ணீருடன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அப்போது ஓட்டுநர் அப்பெண்ணிடம் எதிர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், இந்த நிகழ்வைப் படம் பிடித்த செய்தியாளரையும் மிரட்டும் தொனியில் நடந்துகொண்டார். பேருந்தில் இருந்த மற்ற பயணிகளும் அப்பெண்ணுக்கு ஆதரவாகப் குரல் கொடுத்தனர். அதன்பின் அப்பெண்மணி தொடர்ந்து அழுதுகொண்டே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.