விபரீதத்தில் முடிந்த வாய் தகராறு- பள்ளி மாணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய கடைக்காரர்

 
ழ்ச் ழ்ச்

 ஓசூரில் வாய் தகராறின்போது பள்ளி மாணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய ஸ்வீட் கடைக்காரரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஓசூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து அந்த சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளான். இது சம்பந்தமாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து அந்த சிறுவனை போக்சோ வழக்கில் கைது செய்தனர். சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த அந்த சிறுவன் மீண்டும் அந்த சிறுமியுடன் தொடர்ந்து  செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர் செல்லத்துரை உள்ளிட்ட இரண்டு பேர் அந்த சிறுவனை தாக்கியுள்ளனர்.  இதுகுறித்து அறிந்த சிறுவனின் தம்பியான ஓசூர் அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன்,  செல்லதுரை நடத்தி வரும் சாலை ஓர ஸ்வீட் கடைக்கு சென்று தனது அண்ணனை எப்படி அடிக்கலாம் என செல்லத்துரையிடம் கேள்வி கேட்டுள்ளார்.



அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரம் அடைந்த செல்லத்துரை கொதிக்கும் எண்ணையை மாணவனின் மீது ஊற்றியுள்ளார். இதில் மாணவனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக விசாரணை நடத்திய ஓசூர் போலீசார் செல்லத்துரை உள்ளிட்ட இரண்டு பேரை கைது செய்தனர். தகராறின்போது பள்ளி மாணவன் மீது ஸ்வீட் கடைக்காரர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.