வால்பாறை அருகே தடுப்புச் சுவரில் மோதி டிராக்டர் பயங்கர விபத்து

 
Accident

வால்பாறை அருகே நடுமலை ஆற்றுப்பாலத்தில் அடக்கத்திற்கு உறவினர்கள் சென்ற கருமலை எஸ்டேட் டிராக்டர் டிரய்லர் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயம் அடைந்தனர். 2 பேர் மேல்சிகிச்சைக்கு கோவை கொண்டு செல்லப்பட்டனர்.

வால்பாறை அடுத்துள்ள கருமலை எஸ்டேட்டில் நேற்று சிறுவன் வீட்டில் ஊஞ்சல் அமைத்த சேலையில் சிக்கி உயிரிழந்தார் என கூறப்படுகிறது. அவரது உடலை உடற்கூறாய்விற்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. கூறாய்விற்காக பின் பிற்பகல் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுவன் உடலை ஆம்புலன்சில் ஏற்றி உறவினர்கள்  சென்றனர். 

அதை தொடர்ந்து மற்ற உறவினர்கள் லாரி ஒன்றிலும், டிராக்டரிலும் சென்றனர் அத்துடன் டிராக்டரில் சவப்பெட்டியும் எடுத்து செல்லப்பட்டது. உறவினர்கள் 15 க்கும் மேற்பட்டவர்கள் டிரெய்லரில் நின்றவாறும், அமர்ந்தவாறும் சோகத்தில் சென்றனர். வால்பாறை அருகே உள்ள நடுமலை ஆற்றுப்பாலத்தில் பயணித்த டிராக்டர் டிரெய்லர் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது.
 
இதனால் நிலைகுலைந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். மகேஷ் என்பவர் ஆற்றுக்குள் விழுந்தார். மற்றவர்கள் சாலையோரங்களில் விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்தவர்களை மீட்ட பொதுமக்கள், தீயணைப்பு துறையினர், காவல்துறையினர், நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மகேஷ்வரன்(43), முருகன்(54), குருநாதன்(52), மாரிசெல்வம்(32), முருகன்(49), மணிகண்டன்(45), மூர்த்தி(48), கருப்பசாமி(48), ராமாத்தாள்(67), மூர்த்தி(47), சரவணன்(40), அகஸ்டின்(48) ஆகியோர் சிகிச்சைக்கு சேரக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்த டாக்டர்கள் படுகாயம் அடைந்த மகேஸ்வரன், முருகன் ஆகிய 2 பேரை கோவை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.