கண்ணீரை வரவழைக்கும் சம்பவம்! 4 பேருக்கு வாழ்வளித்த 19 மாத பிஞ்சு குழந்தை..!
ஹைட்ரோகெபாலஸ் (Hydrocephalus) நோயினால் பாதிக்கப்பட்ட 19 மாத குழந்தை ஒன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. குழந்தையின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்த நிலையில், கடந்த 6 நாட்களாக மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்து அதிதீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
எனினும், குழந்தையின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், மருத்துவ நிபுணர்கள் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் உரிய நடைமுறைகளின் அடிப்படையில், நேற்று (ஆகஸ்ட் 24) அதிகாலை குழந்தைக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.
தங்களது குழந்தையின் நிலையைக் கண்டு தாங்கமுடியாத துயரத்தில் இருந்த போதிலும், குழந்தையின் உறுப்புகளை தானம் செய்து, மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு உதவ வேண்டும் என்ற முடிவை அப்பெற்றோர் எடுத்துள்ளனர்.
இதன்மூலம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இந்த உறுப்பு தானத்தின் மூலம், இந்த குழந்தை தான் தமிழ்நாட்டில் மிகவும் குறைந்த வயதுடைய உடல் உறுப்பு கொடையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, ஒரு வயது 8 மாதனே ஆன ஒரு குழந்தையின் உடல் உறுப்புகள் இதே மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன.
இந்த தன்னலமற்ற உறுப்பு தானச் செயலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர்களின் உயர்ந்த மனிதநேயச் தன்னலமற்ற செயலுக்காக குழந்தையின் உடலுக்கு மரியாதை அணிவகுப்பு செய்து பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது என சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தாராமன் தெரிவித்தார்.
தொடர்ந்து, தங்களது குழந்தையை இழந்த தாங்கொணாத் துயரத்திலும், பிறரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் உறுப்பு தானத்திற்கு முன்வந்த பெற்றோரின் இந்த மனிதாபிமானச் செயல், உறுப்பு தானத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் மேலும் ஏற்படுத்தும் ஒரு மகத்தான எடுத்துக்காட்டாகும் என்றுக் கூறினார்.

