ஒரு டீ 2 ரூபாய் மட்டுமே..!! விஜயகாந்த் பிறந்த நாளில் குடியாத்தத்தில் அசத்திய ரசிகர்..!

 
1

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், குடியாத்தம், சித்தூர் கேட் பகுதியில் அன்பரசன் என்பவர் நடத்தி வரும் டீக்கடையில், விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நாள் முழுவதும் ஒரு டீ 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, காலை முதலே பொதுமக்களுக்கு 2 ரூபாய்க்கு டீ வழங்கப்பட்டது. மிகவும் குறைந்த விலையில் டீ கிடைத்ததால் அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கடைக்கு வந்து டீ குடித்தனர். சிலர் பார்சல் வாங்கிச் சென்றனர். பலரும் இந்த முயற்சியை பாராட்டியதுடன், விஜயகாந்தின் பிறந்த நாளை வித்தியாசமான முறையில் நினைவு கூர்ந்த டீக்கடைக்காரர் அன்பரசனுக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்தனர்.

இது குறித்து அன்பரசன் கூறுகையில், “ஆண்டுதோறும் விஜயகாந்த் பிறந்த நாளன்று 2 ரூபாய்க்கு டீ தருகிறேன். அடுத்த ஆண்டு முதல், விஜயகாந்த் பிறந்த நாளன்று ஒருவேளை சாப்பாடு தர வேண்டும் என்று எனக்கு ஆசை. முடிந்தால் செய்து விடுவேன்.

விஜயகாந்த், குடியாத்தம் மருமகன். அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், இந்தப் பகுதியைச் சேர்ந்தவர். நான் சென்னையில் பணியாற்றிய காலத்தில் விஜயகாந்தின் மண்டபத்தில் பல நாட்கள் சாப்பிட்டிருக்கிறேன். அந்த வகையில், அவருடன் எனக்கு ஒரு நெருக்கமான நினைவு உள்ளது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

“விஜயகாந்துக்கு நன்றி செலுத்தி பெருமை சேர்க்க முடிவு செய்தேன். எனவே, அவருடைய பிறந்த நாளில் இன்று நாள் முழுவதும் 2 ரூபாய்க்கு டீ விற்பனை செய்ய முடிவு செய்தேன். விஜயகாந்த் பிறந்த நாளில் அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக செய்வேன்" என்று அவர் கூறினார்.

விஜயகாந்தின் மீது கொண்ட அன்பையும், அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் அன்பு மேற்கொண்ட இந்த வித்தியாசமான முயற்சி, குடியாத்தம் நகரில் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.