மேல்மருவத்தூர் ஆன்மீக பயணம் சோக பயணமாக மாறிய சோகம்! கதறி அழும் உறவினர்கள்

மாமல்லபுரம் கடலில் குளித்த கர்நாடகா பக்தர்கள் 3 ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், மல்லூர் தாலுக்காவில் உள்ள புராலம் கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் 75 பேர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வருவதற்காக ஆன்மீக பயணம் வந்துள்ளனர். கோவிலுக்கு செல்வதற்கு முன்பாக அனைவரும் மாமல்லபுரம் சுற்றுலா வந்துள்ளனர். அங்குள்ள புராதன சின்னங்களை பார்த்த பிறகு கடற்கரைக்கு சென்ற அவர்களில் 5 பேர் கடலில் குளித்துள்ளனர். இதில் நவீன்(24) தனுஷ்(27), முரளி(வயது29) ஆகிய 3 பேரை ராட்சத அலை இழுத்து சென்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாமல்லபுரம் மீனவர் பகுதியை சேர்ந்த அரசு உயிர்காப்பாளர் ராஜி(வயது48) என்பவர் கடலில் நீந்தி சென்று மிதவை உதவியுடன் 3 பேரையும் காப்பாற்ற முயன்றார்.
இதில் ராட்சத அலையில் சிக்கி உயிருக்கு போராடிய ரஞ்சித், முரளி இருவரையும் மட்டும் மிதவை உதவியுடன் காப்பாற்றி கரைக்கு கொண்டு வர முடிந்தது. ஆனால் நவீனை ராட்சத அலை நடுக்கடலுக்கு இழுத்து சென்றதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. பிறகு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடலில் படகில் சென்று நவீன் உடலை தேடி வருகின்றனர். புராலம் கிராமத்தை சேர்ந்த நவீனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அங்கு ஒரு கம்பெனியில் டெம்போ டிவாலர் டிரைவராக பணிபுரிந்து வருகிறாராம். உடன் வந்த அவரது தாய் அனிதா(53) தன் மகன் உயிருடன் கண்டுபிடிக்கப்படுவானா? அல்லது பிணமாக அவனது உடல் எப்போது கரை ஒதுங்கும் என, ஒரு தாயாக அழுத முகத்துடன் கடலை நோக்கி கண்ணீரும், சோகத்துடன் பார்த்து கொண்டுள்ள காட்சி காண்போர் நெஞ்சை உருக வைத்தது. மேலும் மேல்மருவத்தூருக்கு ஆன்மீக பயணம் வந்து சோக பயணமாக மாறிய நிலையில், தங்கள் மேல்மருவத்தூர் பயணத்தை ரத்து செய்து நவீன் உடல் எப்போது? கிடைக்கும் எப்போது ஊர் திரும்புவது? என கடற்கரையில் சோகத்துடன் 75 கர்நாடகா பக்தர்கள் காத்திருப்பதை காண முடிந்தது.