ஒரே ஒரு ஓவியம் ₹167 கோடிக்கு ஏலம்... 130 ஆண்டுகளுக்கு முந்தைய கலைப்படைப்பிற்கு கோடிகளில் மவுசு..!
மும்பையில்'சாப்ரான் ஆர்ட்ஸ் ஸ்பிரிங் லைவ் ஆக்ஷன்' என்ற பெயரில் நடந்த நிகழ்ச்சியில், ஏராளமான பழங்கால ஓவியங்கள், பிரபல ஓவியங்கள் ஏலம் விடப்பட்டன.
நம் நாட்டின் பிரபல ஓவியர் ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பின், ஒவ்வொரு படைப்பாக ஏலம் விடப்பட்டன. ராஜா ரவி வர்மா, கலைப் பயணத்தின் உச்சியில் இருந்த போது, 1890ல் மஹாபாரத கதாபாத்திரங்களான, யசோதா - கிருஷ்ணர் ஆகியோரை வைத்து தீட்டப்பட்ட படைப்பும் இந்த ஏலத்தில் இடம்பெற்றது.
'ஆயில் பெயின்டிங்' எனப்படும் எண்ணெயினால் ஆன வண்ணங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ஓவியத்தில், பசு ஒன்றிடம் யசோதா பால் கறக்கும் போது, குழந்தை கிருஷ்ணர் பின்னால் இருந்து அவரிடம் பால் கேட்கும் அழகான காட்சி தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. ஒரு சாதாரண நிகழ்வை, தெய்வீக தன்மையாக மாற்றும் ரவி வர்மாவின் கலைத் திறன் இந்த ஓவியத்தில் வெளிப்பட்டதை அடுத்து, இந்த ஓவியம் 80 - 120 கோடி ரூபாய் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. அரிய படைப்பு இறுதியில், இந்த ஓவியம் 167.2 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
நம் நாட்டின் பிரபல தொழிலதிபரும், 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனத்தின் உரிமையாளருமான சைரஸ் பூனாவாலா, இந்த ஓவியத்தை அதிக விலை கொடுத்து வாங்கினார்.


