தனிக்கட்சி அறிவிப்பா? இன்று மதியம் 12 மணிக்கு மனம் திறந்து பேசுகிறார் அண்ணாமலை!
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக அரசியலில் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) போன்று தனக்கென ஒரு தனிப்பாதை வகுத்துப் பயணிக்க முடிவெடுத்துள்ளார். இதன் காரணமாக, சென்னையில் இருந்து திடீரென டெல்லி சென்ற அவர், கடந்த சில தினங்களாக அங்கேயே முகாமிட்டு பாஜக தேசியத் தலைவர்களை தொடர்ந்து சந்தித்துப் பேசி வருகிறார். குறிப்பாக, கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷை சந்தித்து தனது முடிவு குறித்து விவாதித்த அண்ணாமலை, தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து கட்சியில் இருந்து விலகும் கடிதத்தை வழங்கியதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்த அண்ணாமலை, தான் பாஜகவில் இருந்து விலகுவது குறித்தும், தமிழகத்தில் புதிய இயக்கம் (தனிக்கட்சி) தொடங்குவது குறித்தும் விரிவாக எடுத்து கூறி அவருடைய ஆசியை பெற்றுள்ளார். முன்னதாக, நேற்று (ஜூன் 4) பிரதமர் மோடியை அண்ணாமலை சந்திப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த சந்திப்பு நடைபெறவில்லை. எனினும், தனிக்கட்சி தொடங்கும் தனது புதிய அரசியல் முடிவை இன்று அவர் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார்.
இது குறித்து அண்ணாமலை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது பிறந்த நாளை முன்னிட்டு தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் அவர் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டுள்ளார்.

