மின் கம்பி அறுந்து விழுந்து பள்ளி மாணவன் பலி

 
Student

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கோமாபுரத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மின் கம்பி அறுந்து விழுந்து பள்ளி மாணவன் பலி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கோமாபுரம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்.  இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், செந்தில்குமார் உயிரிழந்ததை தொடர்ந்து இரண்டு மகன்களையும் இந்திரா கூலி வேலை பார்த்து வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களது மூத்த மகன் ராம்குமார் என்ற ராஜ்குமார் செங்கிப்பட்டி அடுத்த முத்தாண்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

இந்நிலையில் ராம்குமார் இன்று காலை அவரது வீட்டின் அருகே நின்ற போது திடீரென மின்கம்பி ஒன்று அறுந்து அவர் மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து ராம்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சந்திரா என்ற பெண்மணி அவரை மீட்க முயன்ற போது அவருக்கும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதனை அடுத்து அருகே இருந்தவர்கள் ராம்குமாரையும் மின்சாரம் பாய்ந்து காயமடைந்த சந்திராவையும் மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ராம்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது இறப்பை உறுதி செய்து உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதில் காயமடைந்த சந்திராவுக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரக்கூடிய நிலையில், மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பியில் சென்ற மரக்கிளைகளை பலமுறை கூறியும் வெட்டாமல் அலட்சிய போக்கில் செயல்பட்டதன் காரணமாகத்தான் இன்று மரக்கிளைகள் மின்கம்பியில் உரசி மின்கம்பி அறுந்து, பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் அலட்சியமாக செயல்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அப்பகுதியில் தனிவாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி கட்டவும் மரக்கிளைகளுக்கு இடையே செல்லும் மின் கம்பிகளை சரி செய்யவும் அதேபோல் உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு போதிய நிவாரணம் வழங்கவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.