குப்பையில் கிடந்த நகையை போலீசில் ஒப்படைத்த தூய்மைப்பணியாளர்

 
குப்பையில் கிடந்த நகையை போலீசில் ஒப்படைத்த தூய்மைப்பணியாளர் குப்பையில் கிடந்த நகையை போலீசில் ஒப்படைத்த தூய்மைப்பணியாளர்

புதுச்சேரி அருகே குப்பை தொட்டியில் கிடந்த தங்க நகையை போலீசாரிடம் ஒப்படைத்த, துப்புரவு பெண் பணியாளருக்கு பாராட்டு குவிக்கிறது. துப்புரவு பணியாளரின் நேர்மையை பாராட்டி, மேட்டுப்பாளையம் போலீசார் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

புதுச்சேரி தர்மாபுரி பகுதியை சேர்ந்தவர் ஜோதி (58). இவர் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் மூலம் 21 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார்.  இவர் இன்று வழக்கம் போல இந்திராநகர் தொகுதி, அமைதி நகர பகுதியில் சக ஊழியர்களுடன் துப்புரவு பணி மேற்கொண்டார். அப்போது வீடு, வீடாக சென்று குப்பைகளை பெற்று அதனை தனியாக கொட்டி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து இ-பைக்கில் ஏற்றியுள்ளார்.அப்போது குப்பைகளை தரம் பிரிக்கும் போது திடீரென ஒரு பவுன் எடையுள்ள இரண்டு கம்மல்கள் கிடைத்துள்ளது. இதனை எடுத்து பார்த்த ஜோதி, தங்க நகை தான் என உறுதி செய்து அதை சூப்பரவைசர் அருணாவிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து  உடனடியாக காவல்நிலையத்தில் ஒப்படையுங்கள் என அறிவுறுத்தினார். அதன்பேரில் ஜோதி  மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் நடந்த விவரங்களை தெரிவித்து அந்த ஒரு ஜோடி தங்க கம்மலை ஒப்படைத்தனர்.

அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் துப்புரவு பணியாளரின் நேர்மையை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பிறகு இந்த நகை எங்கு கிடைத்ததோ அந்த பகுதிகளில் விசாரித்து அந்த நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பதாக உறுதியளித்தார். தற்போது தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் ஒரு துப்புரவு பணியாளர் கீழே கிடந்த நகையை எடுத்து நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் புதுச்சேரி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.