அமிதாப் பச்சன் வீட்டின் முன் போராட்டம் நடத்தினால் ரூ.11 லட்சம் சன்மானம் - பயங்கரவாதி மிரட்டலால் பலத்த பாதுகாப்பு!

 
amitabh bachchan

மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள, 'ஜல்ஸா' பங்களா என்ற வீட்டில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வசிக்கிறார். 1984 அக்., 31ல், சீக்கியருக்கு எதிரான கலவரத்தின் போது, அவர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் விவகாரத்தை முன்வைத்து, வட அமெரிக்க நாடான கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான், அவ்வப்போது மிரட்டல் விடுத்து வருகிறார்.அந்த வகையில், நடிகர் அமிதாப் பச்சனுக்கு அவர் தற்போதும் மிரட்டல் விடுத்துள்ளார். 

இன்று முதல் வரும் 27ம் தேதி வரை மும்பையில் உள்ள அமிதாப் பச்சன் வீட்டின் முன் போராட்டம் நடத்தும்படி, தன் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பயங்கரவாதி பன்னுான், போராட்டத்தை நடத்துவோருக்கு, 11 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து அமிதாப் பச்சனுக்கு மிரட்டல்கள் வரும் வேளையில், தற்போது பயங்கரவாதி பன்னுானிடம் இருந்தும் மிரட்டல்கள் வருவதால், அவரது வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.