மக்கள் பணிக்கு கிடைத்த பரிசு..!கடும் போட்டி நிலவிய தொகுதியில் கதிர் ஆனந்துக்கு மீண்டும் வாய்ப்பு..!

 
1

மக்களவை தேர்தல் களம் தமிழ்நாட்டில் சூடு பிடித்துள்ள நிலையில் ஆளும் கட்சியான திமுக, கூட்டணி முடிவு மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்பில் முந்தியுள்ளது. மறுபுறம் பிரதான கட்சிகளான அதிமுக, பாஜக ஆகியவை கூட்டணி அமைப்பதில் சிரமத்தை சந்தித்த நிலையில் தற்போது ஒருவழியாக கூட்டணி இறுதிவடிவம் பெற்றுள்ளது. திமுக இந்த தேர்தலில் 21 தொகுதிகளில் நேரடியாக களமிறங்குகிறது. இதில் 10 எம்.பி.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதில் முக்கியமானவர் கதிர் ஆனந்த்..! அமைச்சர் துரைமுருகன் மகனான இவர் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை கதிர் ஆனந்துக்கு மீண்டும் கட்சி தலைமை வாய்ப்பு வழங்குமா என ஒரு சாரார் கேள்வி எழுப்பிய நிலையில் அவருக்கு மீண்டும் வேலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கதிர் ஆனந்த் கட்சி பணி மற்றும் மக்கள் பணி இரண்டிலும் சிறப்பான வகையில் செயல்பட்டதாலேயே மீண்டும் ஒருமுறை கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளதாக தெரிகிறது. 

அதன்படி அவரின் முக்கிய செயல்பாடு என எடுத்துக் கொண்டால், எம்.பி. தொகுதி நிதியிலிருந்து வேலூர் மாவட்டதற்கு சத்துவாச்சாரி  சுரங்கப்பாதை கொண்டு வந்தது, வேலூர் விமான நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது தொடர்பாக மக்களவையில் குரல் கொடுத்தது போன்றவை மிக முக்கியமானவையாகும். மேலும் தொகுதி மக்களுக்கு தேவையான  விஷயங்களை அதிகாரிகளை வைத்து தீர்த்து வைத்தார் என்ற பெயரும் அவருக்கு உள்ளது. வந்தே பாரத் ரயில் காட்பாடியில் நின்று செல்ல வழிவகுத்ததில் அளப்பரிய பங்கு கதிர் ஆனந்துக்கு உள்ளது என கூறினால் அது மிகையாகாது..! இது போன்ற பாசிட்டிவ் விஷயங்கள் எல்லாம் சேர்ந்தே அவரை மீண்டும் வேட்பாளராக கட்சி தலைமை டிக் அடிக்க வைத்துள்ளது.