செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனையா? – "நாங்கள் செல்லவே இல்லை" - வருமான வரித்துறை மறுப்பு..!
வீட்டில் சோதனை என்ற பெயரில் என்னை வருமான வரித்துறையினர் சிறைப்பிடித்துள்ளனர் என செல்வப்பெருந்தகை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்துள்ள நிலையில், வருமான வரித்துறையினர் ஹிந்தி பேசும் அதிகாரிகளைக் கொண்டு 'சோதனை' என்ற பெயரில், ஸ்ரீபெரும்புதூர் சட்டசபைத் தொகுதிக்குள் என்னை சட்டவிரோதமாக முடக்கினர்.பிரசாரத்திற்கு செல்ல விடாமலும், எனது அரசியல் கடமைகளை செய்ய விடாமலும் சோதனை என்ற பெயரில் என்னை சிறைபிடித்து வைத்துள்ளனர். மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் அழுத்தத்தின் கருவிகளாகப் பயன்படுத்துவது கவலை அளிக்கிறது, அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு செல்வ பெருந்தகை கூறியுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ''தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையின் பிரசாரத்தை முடக்க நினைக்கும் சதிக்குக் கடும் கண்டனம்; இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து, தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 48 மணிநேரம் கூட இல்லாத நிலையில், எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் மத்திய பாஜ அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து வருமான வரித்துறை கூறியதாவது: செல்வ பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை. ராகுலின் பிரசாரத்திற்கு செல்ல விடாமல் தடுத்ததாக, செல்வபெருந்தகை கூறுவது உண்மையில்லை. அவரது வீடு உள்ளிட்ட எங்கும் சோதனை நடத்தவில்லை. இவ்வாறு வருமான வரித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.


