ஹாஸ்பிடல் சென்று விட்டு வீடு திரும்பிய நிறைமாத கர்ப்பிணி சாலை விபத்தில் பரிதாப பலி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில், சிகிச்சையில் இருந்த நிறைமாத கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகம் அடுத்த மோச்சேரி பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(25) இவரது மனைவி மோனிகா(21) நிறைமாத கர்ப்பிணியான மோனிகாவை, மருத்துவப் பரிசோதனைக்காக வாசுதேவன் தனது இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பரிசோதனை முடிந்து இருவரும் மீண்டும் இருசக்கர வாகனத்தில் மதுராந்தகம் நோக்கி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, திண்டிவனம் நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சற்றும் எதிர்பாராத நேரத்தில் வாசுதேவன் மோனிகா சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தினால் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த வாசுதேவன் மற்றும் மோனிகா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் முழுவதும் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலானது. விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மோனிகா சிகிச்சைப் பலனின்றி நிறைமாத கர்ப்பிணி மோனிகா பரிதாபமாக உயிரிழந்தார்
விபத்தை ஏற்படுத்திய காரை பின்னால் வந்த கார் ஓட்டுநர் பின் தொடர்ந்து விரட்டி சென்று அந்த காரின் நம்பர் உள்பட அனைத்தையும் தனது காரில் உள்ள கேமராவில் பதிவு செய்து போலீசாரிடம் ஒப்படைத்தார். அதனடிப்படையில் விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து அந்த கார் ஓட்டுநர் விக்னேஸ்வரனை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் காரை அதிவேகமாக ஓட்டி வந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணி விபத்தில் உயிரிழந்த சம்பவம் மோச்சேரி மற்றும் மதுராந்தகம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

