எஸ்.பி.வேலுமணி புகைப்படத்துடன் தீவிரவாதி எனும் போஸ்டர்! கோவையில் பரபரப்பு

 
எஸ்பி வேலுமணி

கோவை குனியமுத்தூர் அருகே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு போஸ்டர்கள் ஒட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் போலீசில்  புகார் அளித்துள்ளனர்.

A poster criticizing SP Velumani as a terrorist has caused a stir in Coimbatore KAK

கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் பகுதிகளில் ஆங்காங்கே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் படத்துடன் தீவிரவாதி என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட நோட்டீஸை மர்ம நபர்கள் ஒட்டிச் சென்றனர். இதைக் கண்ட அதிமுகவினர் அந்த போஸ்டர்களை கிழித்து வீசினார். இதையடுத்து அப்பகுதி அதிமுக நிர்வாகிகள், மகளிரணியினர்  குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கூடியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த உதவி ஆணையர் ரகுபதிராஜாவிடம் உடனடியாக மர்ம நபர்களை பிடிக்க வேண்டும் என கோரி வாக்குவாதம் செய்தனர்.  

இதையடுத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  குறித்து அவதூறான நோட்டீசுகளை ஒட்டி, பொது அமைதிக்கு குந்தக விளைவிக்கும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதிமுகவினர் அளித்த புகார் அடிப்படையில் குனியமுத்தூர் போலீசார் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து அவதூறான போஸ்டர்களை ஒட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.