சாலையில் கிடந்த தங்க, வெள்ளி நகைகளை பத்திரமாக ஒப்படைத்த சுமைதூக்கும் தொழிலாளி

சாலையில் கிடந்த தங்க மோதிரம், ஜிமிக்கி கம்மல், வெள்ளி நகைகளை பத்திரமாக ஒப்படைத்த சுமைதூக்கும் தொழிலாளிஈரோட்டில் சாலையில் கிடந்த 1 சவரன் தங்க மோதிரம், மெட்டி, வெள்ளி நாணயத்தை பத்திரமாக ஒப்படைத்த சுமைதூக்கும் தொழிலாளி செல்வத்தை போலீசார் பாராட்டினர்.
ஈரோடு வைராபாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வம், பூங்கா சாலையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இவர் வழக்கம் போல் பணியில் இருந்தபோது சாலையோரம் மணிபர்ஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்ததை கண்டுள்ளார். அதை எடுத்து பார்த்த போது அதில் தங்க மோதிரம், ஜிமிக்கி கம்மல், வெள்ளி மெட்டி, வெள்ளி காசு ஆகியவை இருந்துள்ளன. அவை கவரிங் நகைகளாக இருக்கும் என நினைத்த செல்வம் அதை தூக்கி வீச முற்பட்டு உள்ளார். ஆனால் சக தொழிலாளர்கள் அது தங்கமாக இருக்கும் என கூறியதால் அதனை சோதனை செய்ததில் ஒரு சவரன் அளவிற்கு தங்க மோதிரம் மற்றும் ஜிமிக்கி கம்மல் இருந்தது தெரிய வந்தது.
சாலையில் அவ்வழியாக சென்றவர்கள் தவறவிட்டிருப்பதை உணர்ந்த செல்வம், சுமை தொழிலாளர் சங்கத்தினருடன் சேர்ந்து அதனை கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதற்கிடையே, நகை காணாமல் போனதாக, வைராபாளையம் பகுதியை சேர்ந்த பிரபா ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவரை வரவழைத்து விசாரணை நடத்திய போலீசார் நகையை அவரிடம் ஒப்படைத்தனர். தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரியும் பிரபா, காலிங்கராயன் பாளையத்தில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற போது, இரு சக்கர வாகனத்தில் பையில் வைத்திருந்த நகையை தவறவிட்டது தெரிய வந்தது. மோதிரம் மற்றும் ஜிமிக்கி கம்மல் திரும்ப கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த பிரபா, சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் நேர்மையுடன் நகையை ஒப்படைத்த தொழிலாளிக்கு போலீசாரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
...