தமிழக மீனவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! இனி நடுக்கடலில் ஆபத்து என்றால் உடனே வரப்போகிறது 'கடல் ஆம்புலன்ஸ்'!
மீனவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர். மீன்பிடித் தொழிலில் பாதுகாப்பின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், கடல் சீற்றம், சூறாவளி, புயல் உள்ளிட்ட நாட்களில் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
கடலில் மீனவர்கள் படகிலிருந்து தவறி கீழே விழுந்து காணாமல் போவது, நடுக்கடலில் இயந்திரக் கோளாறால் படகு தத்தளிப்பது, கடல்நீர் புகுந்து படகு கவிழ்வது, கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவது, பாறைகளில் மோதுவது, நடுக்கடலில் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற முடியாமல் போவது என பல்வேறு வகைகளில் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் நடுக்கடலில் ஏற்படும் விபத்து மற்றும் நோய்களினால் ஆண் டுக்கு 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழக்கின்றனர். நடுக்கடலில் தவிக்கும் மீனவர்களை பெரும்பாலும் மற்ற மீனவர்கள்தான் சென்று மீட்டு வருகின்றனர். இதற்கு பல மணி நேரம் அல்லது ஓரிரு நாட்கள்கூட ஆகின்றன. வளர்ந்த நாடுகள் கடல் ஆம்புலன்ஸ் சேவையை பல ஆண்டுகளாக வெற்றி கரமாக செயல்படுத்தி வருகின்றன.
இந்தியாவில் முதன்முறையாக 2020-ம் ஆண்டில் கேரளாவில் கடல் ஆம்புலன்ஸ் படகு சேவை தொடங்கப்பட்டது.
ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அவசர மருத்துவ உதவி மற்றும் மீட்புப் பணிகளை வழங்கத் தமிழ்நாட்டில் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்று உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
உலக மீன்வள தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில்,
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள்!
“என் அன்பான மீனவ சொந்தங்கள் அனைவருக்கும் இனிய உலக மீன்வள தின நல்வாழ்த்துகள்! மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது, அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது, மீன்பிடித் தொழிலை நவீனப்படுத்துவது, மீனவர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி, குடும்பங்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்பு என நமது மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்கள் பல்வேறு பரிந்துரைகளை வழங்கி உள்ளார். அதனையேற்று, மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை நம் மீனவர்களின் வாழ்வாதாரம் வளம் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை இலக்காக வைத்து வடிவமைத்து வருகிறது.
குறிப்பாக, மீனவர்களின் இன்னுயிர் காக்க, மீனவர்களின் கடல் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழ்நாட்டில் முதன்முறையாக கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்தவும், மேலும் தற்போது ரூ.5 லட்சமாக உள்ள மீனவர்களுக்கான காப்பீட்டுத் தொகையை இரண்டு மூன்று மடங்காக உயர்த்துவது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில் நிலையான மீன்பிடி முறைகளை ஊக்குவிப்பதுடன், அரசு விதிகளையும் புயல் எச்சரிக்கையையும் பின்பற்றி மீனவர்கள் பாதுகாப்புடன் இருப்பதுடன், கடல் வளங்களைப் பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் மீன்வளச் செல்வம் கிடைத்திட உறுதியேற்போம். மீனவர்களின் இடர்பாடுகளில் என்றும் துணைநிற்பதோடு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி தலைமையிலான அரசு என்றும் உறுதுணையாக இருக்கும். மீனவர் நலன் காப்போம்! கடல் வளம் பாதுகாப்போம்! வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்! “ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

