வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ பதிவிட்ட நபர் கைது

 
ஜார்கண்ட்

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்களை தாக்குவதாக வீடியோ வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

gg

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பெருமளவில் பணியாற்றி வருகிறார்கள். இதில் பீகார், அசாம், மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். கட்டிட வேலை, ஹோட்டல், துணிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் தமிழகத்தில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சமீபகாலமாக வதந்தி பரவி வருகிறது. இதுதொடர்பான போலி வீடியோக்களும் பரவியது. 

வடமாநில தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்தியில் அறிவிப்புகளை தமிழக காவல்துறை தனது இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது. வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி, அதை நம்பவேண்டாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பான வீடியோக்களும் போலி என்று தமிழக போலீஸ் கூறியிருக்கிறது. இந்த நிலையில் வட இந்தியர்களை தாக்குவது போன்ற வீடியோக்களை சித்தரித்து இணையதளங்களில் வெளியிட்டு வந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவரை மறைமலைநகர் போலீசார் கைது செய்தனர். இவர் உள்பட 15-பேர் பொத்தேரியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். அவர் மீது இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவருக்கு உடந்தையாக இருந்த சந்தன், சுராஜ் திவாரி, சஞ்சய் சர்மா, சந்தோஷ் சவுத்ரி, சிந்துராம், அனுஜ் குமார் உள்ளிட்ட 6-பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.