புதுச்சேரி- நாகை புறவழிச்சாலையில் புதிய சுங்கச்சாவடி! நாளை மறுநாள் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது
புதுச்சேரி- நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் பாகூர் சேலியமேட்டில் சுங்கச்சாவடி வரும் 24 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

புதுச்சேரி பாகூர் சேலியமேட்டில் சுங்கச்சாவடி அமைந்தால் புதுவை மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். மதகடிப்பட்டில் 25 கிமீ துாரத்தில் ஒரு சுங்கச்சாவடி இருக்கும்போது, இந்த புதிய சுங்கச்சாவடி தேவையில்லை என சேலியமேடு மக்கள் புகார் கூறி போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் வரும் 24ம் தேதி முதல் சேலியமேடு சுங்கச்சாவடி செயல்பாட்டுக்கு வருவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
கார், ஜீப், வேன், இலகு ரக மோட்டார் வாகனங்கள் ஒரு பயணக் கட்டணம் ரூ. 90. ஒரே நாளில் திரும்பும் கட்டணம் ரூ. 140. புதுச்சேரி பதிவு எண் உள்ள வணிக வாகனங்களுக்கு ரூ. 45 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலகுரக வணிக வாகனங்கள் இலகு ரக சரக்கு வாகனங்கள், மினிபேருந்துக்கு ஒரு பயண கட்டணம் ரூ. 150. ஒரே நாளில் திரும்பும் கட்டணம் ரூ. 225. புதுச்சேரி பதிவு எண் உள்ள வாகனத்துக்கு ரூ. 75 நிர்ணயித்துள்ளனர். பஸ் மற்றும் டிரக் ஆகியவற்றுக்கு ஒரு பயணக்கட்டணம் ரூ. 310, ஒரே நாளில் திரும்பும் கட்டணம் ரூ. 470. புதுச்சேரி பதிவு எண் இருந்தால் ரூ. 155 நிர்ணயித்துள்ளனர்.


