பொங்கல் பரிசு தொகுப்பில் புது பானை..? வெளியான தகவல்!

 
1 1

2026ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த முறை பொங்கல் பரிசு குறித்த எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, திமுக அரசு பொங்கல் பரிசுடன் ரொக்க பணம் வழங்குவதை நிறுத்தியிருந்த நிலையில், தேர்தல் ஆண்டாக இருப்பதால், இந்த முறை ரொக்கப் பணமும் சேர்த்து வழங்கப்படுமா என்ற விவாதம் எழுந்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு பச்சரிசி, கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இந்நிலையில், வரவிருக்கும் 2026ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், களிமண்ணால் செய்யப்பட்ட ஒரு புதிய பானையையும், ஒரு புதிய அடுப்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம், அரசுக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளனர்.

 மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில், சென்னையில் ஒரு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் சேம நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 13 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய அரிசியை அறுவடை செய்து, புது பானையில் பொங்கலிடுவதுதான் நமது பாரம்பரியம். எனவே, அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன், களிமண்ணால் ஆன ஒரு புதிய பானையையும், ஒரு புதிய அடுப்பையும் அரசு கொள்முதல் செய்து, விலையில்லாமல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும். இதன் மூலம், மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்று அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பருவமழை காலங்களில், மண்பாண்ட தொழிலாளர்களால் தங்களது தொழிலை மேற்கொள்ள முடிவதில்லை. இதை கருத்தில் கொண்டு, அரசு தற்போது வழங்கும் மழைக்கால நிவாரண உதவித் தொகையான ரூ.5,000-ஐ, மீனவர்களுக்கு வழங்குவதை போல, ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும், மின்சாரத்தால் இயங்கக்கூடிய மின் சக்கரத்தை இலவசமாக வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக மண்பாண்ட தொழில் செய்து வரும் தொழிலாளர்கள், அவர்கள் வசிக்கும் வீட்டிற்கும், தொழில் செய்யும் இடத்திற்கும் அடிமனை பட்டா வழங்கி, அவர்களது வாழ்விடத்தை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து உழவர் சந்தைகளிலும், மண்பாண்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏற்ற வகையில், தலா இரண்டு கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.