லஞ்சத்திற்கு ஆப்பு வைக்க புதிய திட்டம்..! புகார்களை கையாள லஞ்ச ஒழிப்புத் துறையில் 'தனிப்பிரிவு' அமைப்பு!
லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது புகார் தெரிவிக்க, தமிழக அரசு, 94981 80936 என்ற, 'வாட்ஸாப்' எண்ணை அறிவித்து உள்ளது. மேலும், சென்னை ஆலந்துாரில் உள்ள லஞ்ச ஒழிப்பு இயக்குநர் அலுவலகத்திற்கு, லஞ்சம் குறித்து புகார் தெரிவிக்க, 044 - 22321090, 22321089, 22310989, 22342142 என்ற தொலைபேசி எண்களும், nic,in என்ற இ - மெயில் முகவரியும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் அலுவலகத்தில், அரசு அறிவித்துள்ள புதிய வாட்ஸாப் எண்களுக்கு வரும் தகவல்கள் மற்றும் புகார்கள் குறித்து விசாரிக்க, தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: லஞ்ச ஒழிப்பு போலீசாரின் செயல்பாடுகள் மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்படுவது பற்றி, தகவல் சேகரிக்கும் போலீசார், அதுபற்றி தங்களுடன் பணிபுரியும் சக போலீசாரிடம் கூட தெரிவிக்கக்கூடாது. தங்களின் மேலதிகாரிகளிடம் மட்டுமே தகவல் பரிமாற்றம் நடத்த வேண்டும் என, லஞ்ச ஒழிப்பு துறையில் பணிபுரியும், சி.ஐ.டி., பிரிவு போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில், தற்போது அரசு அறிவித்துள்ள வாட்ஸாப் எண்களுக்கு வரும் புகார்கள் மற்றும் தகவல்களை கையாள தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மீதான நடவடிக்கைகளில் ரகசியம் காக்க வேண்டும். தகவல் கசிந்தால், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராக உள்ள, ஐ.ஜி., மகேஸ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

