இனி டாஸ்மாக் ஊழியர்களுக்கு வந்தாச்சு புது டிரெஸ் கோட்!

 
1

டாஸ்மாக் ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள் (Supervisors) என அனைவருக்கும் சீருடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேற்பார்வையாளர்கள், லேசான நீல நிறச் சட்டையும், அடர் நீல நிறக் (Navy Blue) பேண்ட் (Trousers) அணிவர். விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் பழுப்பு நிற (Beige) சட்டையும், அடர் சாம்பல் நிறக் பேண்ட் அணிவர். ஒவ்வொரு ஊழியருக்கும் மூன்று செட் சீருடைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடை ஊழியர்களின் பணியின் தன்மையைக் கருத்தில் கொண்டும், கடைகளில் சீரான, நேர்த்தியான மற்றும் தொழில்முறை தோற்றத்தைப் கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்காக இந்தச் சீருடைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானது எனப் பரசீலிக்கப்பட்டுள்ளது" என்று டாஸ்மாக்கின் அனைத்து மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோ-ஆப்டெக்ஸ் (Co-optex) நிறுவனம் மூலம் துணி வழங்கப்படும்" என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் தெரிவித்தார். சட்டையின் இடதுபுற நெஞ்சில் டாஸ்மாக் இலச்சினை (Emblem) பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். அக்டோபர் 31-ஆம் தேதிக்குள்ளாக துணிகளை கொள்முதல் செய்யும் பணி முடிவடைவதோடு, நவம்பர் 10-ஆம் தேதிக்குள்ளாக மூன்று செட் சீருடைகளையும் தைத்து முடிக்கும் பணியும் நிறைவடைய வேண்டும்.

மாநிலம் முழுவதும் சீருடைகளைக் கொள்முதல் செய்வதிலோ, தைப்பதிலோ அல்லது விநியோகிப்பதிலோ நடைமுறைச் சிக்கல்கள் எழுந்தால், ஊழியர்களுக்கு மூன்று செட் சீருடைகளுக்காக ஆண்டுதோறும் ஒரு செட்டிற்கு ரூ2,000 வீதம் சீருடைப்படி (Uniform Allowance) வழங்கப்படும். இந்தக் கொடுப்பனவு துணியின் விலை மற்றும் தையல் கூலி ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

தகுதியுள்ள ஒவ்வொரு ஊழியரின் வங்கிக் கணக்கிலும், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் தேதியன்று இந்தச் சீருடைப்படி வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2019-ஆம் ஆண்டில், எலைட் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கோட் (Blazer) உட்பட சீருடைகள் வழங்கப்பட்டன. ஆனால், அந்தத் திட்டம் வெற்றிபெறவில்லை. 

ஜூலை 2026 நிலவரப்படி, டாஸ்மாக் நிறுவனம் 4,048 சில்லறை விற்பனைக் கடைகளையும், 22,877 ஊழியர்களையும் (6,473 மேற்பார்வையாளர்கள், 14,379 விற்பனையாளர்கள் மற்றும் 2,025 உதவி விற்பனையாளர்கள்) கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பிரதான வருவாய் ஆதாரமாகத் திகழும் இந்நிறுவனம், 2025-2026 ஆம் ஆண்டிற்கான வருவாயாக ரூ50,845 கோடியை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.