நவ.29ல் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் - வானிலை மையம் தகவல்!!

 
rain

தமிழகத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால்  அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், இது  குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது . அதன்படி இன்று ராமநாதபுரம் ,புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும்,  திருநெல்வேலி, தூத்துக்குடி ,கன்னியாகுமரி ,கடலூர், விழுப்புரம் ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

rain

சென்னையை பொருத்தவரை நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அத்துடன் சென்னையில் இன்று முதல் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில் டிசம்பர் 1க்குள் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain

இந்நிலையில் வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நவம்பர் 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் கரைநோக்கி இது நகரக் கூடும் என்பதால் நவம்பர் 29 க்குப்பின் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆயினும் ஏற்கனவே கூறியபடி தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.