நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!!

 
heavy rain

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது சென்னை  உள்ளிட்ட இடங்களில் மழை ஓய்ந்து, வெயில் வந்துள்ளது. 

rain

இந்நிலையில் வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடையக் கூடும் . இதனால் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு கனமழை கொட்டி தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்று நீலகிரி, கோவை ,கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் , ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கனமழையும்,   நாளை மறுதினம் திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் 15ஆம் தேதி உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,   ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

Chennai rain

சென்னையை பொறுத்தவரை  நேற்று காலை நிலவரப்படி தாம்பரத்தில் 23 சென்டி மீட்டரும் , சோழவரத்தில் 22 சென்டி மீட்டரும்  மழை பதிவாகியுள்ளது. அதேபோல் தாமரைப்பாக்கம் ,அம்பத்தூர், எம்ஜிஆர் நகர், எம்ஆர்சி நகர் ஆகிய இடங்களில் தலா 15 சென்டி மீட்டர் மழையும்,  சென்னை விமான நிலையம் ,தரமணி, அண்ணா பல்கலைக்கழகம், அயனாவரம்  உள்ளிட்ட இடங்களில் 14 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.