தவெக, காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த புதிய கூட்டணி..? பிரவீன் சக்கரவர்த்தி ட்வீட்..!!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்தப் போதிலும், ஆட்சியமைக்கத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை கிடைக்கவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய், கடந்த மே 10- ஆம் தேதி முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
இது ஒருபுறம் இருக்க, சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவின் சி.வி.சண்முகம் ,தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மாநிலங்களவையில் தமிழகத்திற்கு ஒரு சீட் காலியானது.
காங்கிரஸ் கேட்டுக்கொண்டதன் பேரில் மாநிலங்களவை பதவிக்கான இடம் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதன்பேரில், காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அந்த இடத்திற்கு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரவீன் சக்கரவர்த்தி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழக வெற்றிக் கழகம்+ காங்கிரஸ்+விடுதலைச் சிறுத்தைகள் கட்சி+ இந்திய யூனியன் முஸ்லிம் லீக்+ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி+ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அடங்கிய தமிழ்நாடு சமூகநீதி முற்போக்குக் கூட்டணியின் முதல் எம்.பி. வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதைபெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி. தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்று பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

