மரணத்தின் நடுவே நடந்த பேரதிசயம்! இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை!

 
1

கொலம்பியாவில் ஏற்பட்ட, 7.4 ரிக்டர் அளவு கடும் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை, 250ஐத் தாண்டியுள்ளது. கட்டட இடிபாடுகளில், 3,000க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது .

இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்தன. கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், மீட்புப் பணிகளில் ஈடுபடுவோர் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.கடுமையாக பாதிக்கப்பட்ட கலி நகரில் கட்டட இடிபாடுகளில் இருந்து, ஒன்றரை வயதுள்ள கைக்குழந்தை உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது, மீட்புக் குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒருவருக்கு, கட்டட இடிபாடுகளில் இருந்து குழந்தையின் விசும்பல் கேட்டது. உடனே, அங்கிருந்த அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். அப்போது குழந்தையின் அழுகுரல் தெளிவாக கேட்டது.

மேலும், அக்குழந்தையை தன் மார்போடு அணைத்துக் கொண்டு, கட்டட இடிபாடுகளை தன் முதுகில் வாங்கிய அதன் தந்தையும், உதவி கேட்பது தெளிவாக கேட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பின், அக்குழந்தையும், தந்தையும் மீட்கப்பட்டனர்.