பத்திர பதிவுத்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்- ஒரு லட்சம் பத்திரங்கள் பதிவு
தமிழ்நாடு முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் வராமல் ஆன்லைன் மூலமாக பத்திரம் பதிவு செய்யும் நடைமுறை மூலம் இதுவரை ஒரு லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் நேரடியாக தொடர்பற்ற எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (24X7X365) இணையவழியே மட்டும் தங்களது ஆவணங்களை தாக்கல் செய்யும் வருகையில்லா ஆவணப் பதிவு" (Presenceless Registration) என்ற நடைமுறை 17.08.2026 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களால் மனைப்பிரிவில் முதல் விற்பனை (First sale of Plot) மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் விற்பனை (First sale of Flat) ஆகிய இரண்டு ஆவணங்களைப் பொறுத்து கட்டாயமாக்கப்பட்டது.
இத்திட்டம் பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நிலவிற்பனையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சார்ந்த உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு (Deposit of Title Deeds) மற்றும் இரசீது ஆவணங்கள் (Receipt Deeds) ஆகியவை 15.09.2026 முதல் இத்திட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டது.
இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
1. முழுமையான சட்டப்பாதுகாப்புடன் கூடிய நம்பகமான ஆவணப்பதிவு முறை.
2. பொதுமக்கள் விடுமுறை நாட்களிலோ அல்லது தங்கள் அலுவலக வேலை முடிவடைந்தவுடன் ஓய்வு நேரத்திலோ ஆவணம் சமர்ப்பிக்கும் வசதி.
3. சார்பதிவாளர் அலுவலகத்தில் காத்திருக்காமல் கட்டுமான நிறுவனங்கள்/நிலவிற்பனையாளர்கள்/வங்கிகள்/நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தங்களுக்கு வசதியான நேரத்தில் ஆவணம் சமர்ப்பிக்கும் வசதி.
4. ஆவணம் சமர்ப்பிக்கும் இடத்தில் பொதுமக்களே நேரடியாக ஆன்லைன் வழி பணம் செலுத்தும் வசதி.
5. விற்பனை மற்றும் வங்கிக்கடன் ஆவணம் ஆகிய இரண்டு ஆவணங்களையும் ஒருங்கே சமர்ப்பிக்கும் வசதி.
6. ஒரு முறைக்கு பலமுறை சரிபார்த்து பொறுமையாக திருத்தங்கள் செய்து வரைவு ஆவணத்தை ஆன்லைனில் சரிபார்த்து சமர்ப்பிக்கும் வசதி.
7. ஆதார் அங்கீகாரத்துடன் கூடிய பதிவு என்பதால் நம்பகத்தன்மை.
திட்டம் கட்டாயமாக்கப்பட்ட 17.08.2026 முதல் 30.09.2026 வரையுள்ள 44 நாட்களிலேயே 1,00,134 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஐந்து லட்சம் பொதுமக்களின் கால விரையம் மற்றும் தேவையற்ற செலவு குறைக்கப்பட்டுள்ளது, இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இத்திட்டம் படிப்படியாக பிற ஆவணங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் பொது கட்டுமான நிறுவனங்கள், வங்கிகளின் ஆலோசனைகள், பின்னூட்டத்தி மென்பொருளில் மாற்றங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

